‘பாரத்’ என மாற்ற பரிந்துரை

புதுடெல்லி: அக்டோபர் . 26 – இந்தியா சமீபத்தில் ஜி20 உச்சி மாநாட்டுக்கு தலைமை வகித்தது. அப்போது அதில் கலந்து கொண்ட வெளிநாட்டு தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் அளித்த விருந்தின் அழைப்பிதழில் முதன் முதலாக குடியரசுத் தலைவர் என்பதற்கு பதில் பாரத குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டது. அதன்பின் அந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடியின் இருக்கைக்கு முன் இந்தியா என்பதற்கு பதில் பாரத் என பெயர் பலகை வைக்கப்பட்டது.
இந்நிலையில், பள்ளிப் பாடப் புத்தகங்களில் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்சிஇஆர்டி)உருவாக்கிய உயர்நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது. இது குறித்து இக்குழுவின் தலைவரும், வரலாற்று ஆராய்ச்சி இந்திய கவுன்சில் உறுப்பினருமான ஐசக் கூறியதாவது:
பள்ளிப் பாடத்திட்டத்தை மாற்றிய மைப்பதற்காக உருவாக்கப்பட்ட என்சிஇஆர்டி, சமூக அறிவியல் பாடத்துக்கான உயர் நிலைக் குழுவை அமைத்தது. என்சிஇஆர்டி புதிய பாடப் புத்தகங்களில் மாற்றங்களை செய்ய 7 உறுப்பினர்கள் கொண்ட குழு ஒருமனதாக பரிந்துரை செய்துள்ளது.அரசியல் சாசனத்தின் 1(1) வது பிரிவில் இந்தியாவின் பெயர் ஏற்கெனவே பாரத் என்று உள்ளது. பாரத் என்பது பழங்கால பெயர். 7,000 ஆண்டுகள் பழமையான விஷ்ணு புராணம் போன்ற பழங்கால புத்தகங்களில் பாரத் என்ற பெயர் குறிப்பு உள்ளது.கிழக்கு இந்திய கம்பெனி வந்த பின்பும், 1757-ம் ஆண்டு பிளாஸி போருக்குப் பின்புதான் இந்தியா என்ற பெயர் பயன்படுத்தப்பட்டது. அதனால், அனைத்து வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்களில் இந்தியா என்ற பெயருக்கு பதில் பாரத் என்ற பெயரை பயன்படுத்த வேண்டும் என உயர்நிலைக் குழு ஒருமனதாக பரிந்துரை செய்துள்ளது.