பாராளுமன்றத்தில் இன்றும் அமளி

புதுடெல்லி, டிசம்பர் 15-
பாராளுமன்றத்தில் வண்ண புகை குண்டு வீச்சு சம்பவம் இன்றும் பெரும் அமளியை ஏற்படுத்தியது. பாராளுமன்ற பாதுகாப்பு முழு தோல்வி அடைந்து விட்டது என்பது குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இன்றும் மக்களவை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது
இரு அவைகளிலும் அமளி நிலவியதால் காலையில் அவை நடவடிக்கைகள் எதுவும் நடைபெறாமல் மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவையில் பாதுகாப்பு இல்லாதது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்யக் கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால், மக்களவை மற்றும் ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என நேற்றும், லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், 14 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மக்களவையில் 13 உறுப்பினர்களும், ராஜ்யசபா உறுப்பினர் ஒருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, அவை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை பாராளுமன்றம் கூடியதும் எதிர்க்கட்சிகள் மீண்டும் இந்த பிரச்சனையை கையில் எடுத்து அரசுக்கு எதிராக போர் கொடி தூக்கியது பாராளுமன்றத்திற்கு பாதுகாப்பு இல்லை உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்
இதனால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. கேள்வி பதில் நிகழ்ச்சியை சபாநாயகர் ஓம்பிர்லா நடத்த அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தார் ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பியதால் அமளி ஏற்பட்டது. இந்த அமளிக்கு மத்தியில் சபாநாயகர் ஓம்பிர்லா அவையை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்தார்.
பாஜக எம்பி பிரதாப் சிம்மாவுக்கும் மக்களவையில் தாக்குதல் நடத்தியவர்களுக்கும் இடையே உள்ள உறவு குறித்து உறுப்பினர்கள் பல்வேறு தகவல்களை கூறி மத்திய உள்துறை அமைச்சர் அவையில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரினர். ராஜ்யசபாவிலும், லோக்சபா பாதுகாப்பு குளறுபடி குறித்து முதலில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்ததால், ராஜ்யசபாவில் குழப்பமான சூழல் ஏற்பட்டு, சபை ஒத்திவைக்கப்பட்டது.