பாராளுமன்றத்தில் தீக்குளிக்க திட்டமிட்டது அம்பலம்

புதுடெல்லி, டிச. 17- மக்களவையில் பாதுகாப்பு விதிமீறலில் ஈடுபட்ட குற்றவாளிகள், நாடாளுமன்றத்தில் தீக்குளிக்க திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் அதிர்ச்சித் தகவலை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய 6வது குற்றவாளியை டெல்லி போலீசார் நேற்று கைது செய்த நிலையில், குற்றவாளிகளுக்கு பாஸ் கொடுத்த மைசூரு பாஜ எம்பி பிரதாப் சிம்ஹாவிடம் விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர். மக்களவையில் கடந்த 13ம் தேதி 2 இளைஞர்கள் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து எம்பிக்கள் இருக்கும் பகுதிக்குள் குதித்து, கலர் புகை குண்டுகளை வீசி பரபரப்பை ஏற்படுத்தினர். அதே சமயம், 2 பேர் நாடாளுமன்றத்தின் வெளியே கலர் குண்டுகளுடன் அரசை கண்டித்து கோஷமிட்டனர்.இந்த பாதுகாப்பு விதிமீறல் விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக சாகர் சர்மா, மனோரஞ்சன், நீலம் தேவி, அமோல் ஷிண்டே ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது தீவிரவாத தடுப்பு சட்டமான உபா பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு மூளையாக செயல்பட்ட, தலைமறைவாக இருந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த லலித் ஜா கடந்த வியாழன் இரவு கைது செய்யப்பட்டார். இவர்கள் 5 பேரும் 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், லலித் ஜா தப்பிக்க உதவியதாக மகேஷ் குமாவத் என்பவரை டெல்லி போலீசார் நேற்று கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 7 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டது. இந்த விவகாரத்தில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கைலாஷ் என்கிற இன்னொரு நபரையும் போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே, குற்றவாளிகளிடம் டெல்லி சிறப்பு படை போலீசார் நடத்தி வரும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து போலீசார் கூறுகையில், ‘‘கைதானவர்கள் தங்களின் கோரிக்கைக்காக அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு திட்டங்களை தீட்டி உள்ளனர். முதலில், உடலில் தீ தடுப்பு ஜெல் தடவிக் கொண்டு நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் தீக்குளிப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.ஆனால் கள்ளச்சந்தையில் போதிய அளவு ஜெல் வாங்க முடியாததால் அந்த முடிவை கைவிட்டதாக முக்கிய குற்றவாளி லலித் ஜா கூறி உள்ளார். அடுத்ததாக, மக்களவையில் பார்வையாளர் மாடத்தில் உள்ள அனைவருக்கும் அரசுக்கு எதிரான துண்டு பிரசுரம் விநியோகிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
அதையும் பின்னர் கைவிட்டுள்ளனர்.
இறுதியாக, எளிதாக கிடைக்கும் பொருள் என்பதாலும், எளிதாகவும் மறைத்து எடுத்துச் செல்லலாம் என்பதாலும் கலர் புகை குண்டுகளை வீசும் திட்டத்தை அரங்கேற்றி உள்ளனர்’’ என்றனர். கைதான அனைவரையும் போலீசார் அவர்கள் சந்தித்த இடங்களுக்கு அழைத்துச் சென்று, சதித்திட்டம் தீட்டியது எப்படி என நடித்துக் காட்ட செய்துள்ளனர். முக்கிய குற்றவாளியான லலித் ஜா, நாடாளுமன்றத்தின் வெளியே குற்றவாளிகள் 4 பேரின் செல்போனையும் வாங்கிக் கொண்டு, அங்கு நடந்த போராட்டத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளார்.