
புதுடெல்லி: பிப்ரவரி 4-
நாடாளுமன்றத்தில், ஜனாதிபதி திரெளபதி முர்மு ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் விவாதம் நடந்து வருகிறது. அந்தவ வகையில் இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி பதிலுரை நிகழ்த்த உள்ளார். இந்த வேளையில் பிரதமர் மோடி காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சியினரை சீண்ட வாய்ப்புள்ளது.
ஆண்டின், முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் தொடங்கும். அதன்படி ஜனவரி 28ல் நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையாற்றினார். அதன்பிறகு கடந்த 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இப்போது நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் எம்பிக்கள் பேசி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று மாலையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி பதிலுரை வழங்க உள்ளார். பிரதமர் மோடி மாலை 5 மணிக்கு நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ளார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியை சீண்டி பேச வாய்ப்புள்ளது. ஏனென்றால் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளி செய்து வருகின்றனர். லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இந்தியா – சீனா இடையேயான டோக்லாம் விவகாரம் குறித்து முன்னாள் ராணுவ தளபதி நரவனே நினைவு குறிப்பில் உள்ளதாக கூறி பேசியதற்கு ஆளும் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து ராகுல் காந்தி பேச அனுமதிக்கவில்லை. ராகுல் காந்தி சபை விதியை மீறுவதாக மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, கிரண் ரிஜிஜு கூறினர். இதனால் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நேற்று முன்தினம் சபை முடங்கியது. அதன்பிறகு நேற்று நடந்த சபையிலும் கூட ராகுல் காந்தி பேச அனுமதிக்கப்படவில்லை. இதனால் எதிர்க்கட்சி எம்பிக்கள் கூச்சல், குழப்பம் செய்தனர். 3 முறை சபை ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் சில எம்பிக்கள் காகிதத்தை கிழித்து சபாநாயகர் இருக்கை நோக்கி வீசினர். இதனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹிபி ஈடன், அமரிந்தர் சிங் ராஜா வாரிங், விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், குர்ஜீத் சிங் அஜ்லா, பிரசாந்த் யாதவ் ராவ் படோலே மற்றும் சாமலா கிரண் குமார் ரெட்டி, டீன் குரியகோஸ், மதுரை எம்பி சு வெங்கடேசன் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அதன்பிறகு லோக்சபா ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று காலை 11 மீண்டும் தொடங்கி விவாதம் நடைபெற உள்ளது.










