
டெல்லி: பிப்ரவரி 5-
நாடாளுமன்றத்தில், கடந்த 3 நாட்களாக லோக்சபா தொடர்ந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் முடங்கி வருகின்றனர். நேற்று பிரதமர் மோடியை லோக்சபாவில் பேச விடாமல் எதிர்க்கட்சி எம்பிக்கள் சபையை முடக்கினர். இதன் தொடர்ச்சியாக இன்று மீண்டும் லோக்சபாவில் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து லோக்சபா மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதுவரை ராஜ்யசபா அமைதியாக நடந்து வந்த நிலையில் இன்று பிரதமர் மோடி பேச உள்ளார். இதற்கிடையே தான் இன்று எதிர்க்கட்சி எம்பிக்கள் ராஜ்யசபாவிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்
நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 28 ம் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையாற்றினார்.
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் எம்பிக்கள் பேசி வருகின்றனர். 3 நாட்களாக விவாதம் நடந்து வருகிறது. எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை பேச அனுமதிக்கவில்லை என்று கூறி காங்கிரஸ் உள்பட ‛இந்தியா’ கூட்டணி கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் நேற்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி மாலை 5 மணிக்கு பேச இருந்தார். ஆனால், அவர் சபைக்கு வருவதற்கு முன்பாகவே காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது. இன்று காலை 11 மணிக்கு மீண்டும் லோக்சபா தொடங்கியது. அப்போது சீன எல்லை விவகாரம், அமெரிக்கா – இந்தியா வர்த்தக ஒப்பந்தம் பற்றி விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷமிட்டனர்.
இதையடுத்து, லோக்சபா மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல் இன்று ஜனாதிபதி உரையின் மீதான நன்றி சொல்லும் தீர்மானத்தின் மீது ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேச உள்ளார். கடந்த 3 நாட்களாக அமைதியாக நடந்து வந்த ராஜ்யசபாவில் இன்று எதிர்க்கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சீன எல்லை விவகாரம், அமெரிக்கா – இந்தியா வர்த்தகம் மற்றும் லோக்சபாவில் ராகுல் காந்தியை பேச அனுமதிக்காததை கண்டித்து கோஷமிட்டனர். இந்த அமளிக்கு நடுவே தொடர்ந்து ராஜ்யசபா நடந்து வருகிறது.










