பாராளுமன்ற சபாநாயகரின் தேர்வு செய்ய முதல் முறையாக தேர்தல்

டெல்லி: ஜூன் 25- லோக்சபா சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் ஓம் பிர்லாவை எதிர்த்து “இந்தியா” கூட்டணியின் வேட்பாளராக கொடிக்குன்னில் சுரேஷ் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். லோக்சபா சபாநாயகர் தேர்தலில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி போட்டியின்றி தேர்வு செய்ய மத்திய அரசு எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்தன. லோக்சபா துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு பாஜக கூட்டணி விட்டுத் தர மறுத்து அடம்பிடித்ததால் சபாநாயகர் தேர்தலில் இந்தியா கூட்டணியும் களமிறங்கி உள்ளது. இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் லோக்சபா சபாநாயகர் பதவிக்கு முதல் முறையாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.
18-வது லோக்சபாவின் முதலாவது கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை லோக்சபா சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பொதுவாக லோக்சபா சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படுவதில்லை. ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒருங்கிணைந்து ஒருமனதாக போட்டியின்றி ஒருவரைத் தேர்ந்தெடுப்பது மரபாகும்.ராஜ்நாத் சிங் திடீர் பேச்சுவார்த்தை: இந்த நிலையில் நேற்று வரை லோக்சபா சபாநாயகர் பதவி தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் மத்திய அரசு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. லோக்சபா சபாநாயகர் பதவிக்கான வேட்பு மனுத் தாக்கல் முடிவடையும் நிலையில் எதிர்க்கட்சிகளுடன் மத்திய அரசு தரப்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையில் திமுகவின் டிஆர் பாலு, காங்கிரஸின் கேசி வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். துணை சபாநாயகர் பதவி: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்குடனான பேச்சுவார்த்தையில் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு தர வலியுறுத்தப்பட்டது. இதனை மத்திய அரசு தரப்பு ஏற்க மறுத்தது. இதனால் இந்தியா கூட்டணி தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, இந்தியா கூட்டணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை மத்திய அரசும் பிரதமர் மோடியும் அவமதித்துவிட்டதாக குற்றம் சாட்டினார்.கொடிக்குன்னில் சுரேஷ் போட்டி: இதனைத் தொடர்ந்து தற்போது இந்தியா கூட்டணி சார்பில் கேரளாவைச் சேர்ந்த கொடிக்குன்னில் சுரேஷ் (காங்கிரஸ்), லோக்சபா சபாநாயகர் தேர்தலில் களமிறக்கி இருக்கிறது. 8 முறை எம்பியான இவருக்குதான் லோக்சபா தற்காலிக சபாநாயகர் பதவி கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு கொடிக்குன்னில் சுரேஷுக்கு இந்த வாய்ப்பைத் தரவில்லை. கொடிக்குன்னில் சுரேஷ் என்பதால் தற்காலிக சபாநாயகர் வாய்ப்பை தரவில்லை என “இந்தியா” கூட்டணி தலைவர்கள் குற்றம்சாட்டி இருந்தனர். இந்த நிலையில் லோக்சபா சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் கொடிக்குன்னில் சுரேஷ் தற்போது வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். லோக்சபா சபாநாயகர் பதவிக்கு முதல் முறையாக தேர்தல் நடைபெற உள்ளது.