பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெல்லும் – ஸ்டாலின் நம்பிக்கை

சென்னை : டிச.16- வெள்ள பாதிப்புகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக கையாண்டதாக ஒன்றிய அரசின் குழு பாராட்டி உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் கொண்டார். தனியார் ஆங்கில நாளிதழுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில், “வெள்ள பாதிப்புகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக கையாண்டதாக ஒன்றிய அரசின் குழு பாராட்டி உள்ளது. ஒன்றியக் குழுவின் பாராட்டே தமிழ்நாடு அரசு திறமையாக செயல்படுகிறது என்பதை நிரூபித்துள்ளது.தமிழ்நாடு அரசின் நிர்வாகம் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் உள்ளது .2 நாட்கள் இடைவிடாது தொடர்ந்து மழை பெய்தது மழை நின்றவுடன் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
உடனடியாக போக்குவரத்து தொடங்கப்பட்டு பெரும்பாலான பகுதிகளில் 3 நாட்களில் மின்சாரம் வழங்கப்பட்டது. 2015-ல் செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க முதலமைச்சர் ஜெயலலிதாவின் அனுமதிக்காக அதிகாரிகள் காத்திருந்தனர்.ஆனால் தற்போது முன்னெச்சரிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. தற்போது வரலாறு காணாத வகையில் மழை கொட்டியதால் வெள்ளம் ஏற்பட்டது.36 மணி நேரத்தில் 53 செ.மீ. மழை பெய்ததால் கடும் வெள்ளமும் பெரிய அளவில் பாதிப்பும் ஏற்பட்டது. சென்னை, புறநகர் பகுதிகளில் வெள்ள பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கை விரைவில் வெளியிடப்படும்.வரும் நாடாளுமன்ற தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி வெல்லும்.ம.பி., உள்ளிட்ட 3 மாநில தேர்தலில் பாஜக வென்றதால் ‘இந்தியா’ கூட்டணிக்கு பின்னடைவு இல்லை. 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்காது. குறிப்பிட்ட மாநிலத்தில் உள்ள பிரச்சனைகள் அடிப்படையிலேயே சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. ராஜஸ்தானில் 10 லட்சம் வாக்கு வித்தியாசத்தில்தான் பாஜக வெற்றி பெற்றிருந்தது.சத்தீஸ்கரில் பாஜகவுக்கு 6 லட்சம் வாக்குகளே கூடுதலாக கிடைத்துள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.