பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு மெட்ரோ மஞ்சள் பாதை சேவை

பெங்களூரு, டிச. 14: பெங்களூரு மெட்ரோ ரயில் மஞ்சள் பாதையில் சேவை மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தொடங்க வாய்ப்பு உள்ளது. பெங்களூரு மெட்ரோ ரயில் கழகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் 6 பெட்டிகள் கொண்ட ரயில் சேவைக்கான‌ தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார். முன்மாதிரி ரயிலைப் பெற்ற பிறகு, பெங்களூரு மெட்ரோ ரயில் கழகதிற்கு தேவையான சோதனை ஓட்டங்களை நடத்துவதற்கும், வணிக நடவடிக்கைகளுக்கான அனுமதிகளைப் பெறுவதற்கும் குறைந்தது 3 மாதங்கள் தேவைப்படும் என்று அதன் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி பி.எல்.யஷவந்த் சவான் தெரிவித்தார். இருப்பினும், மக்களவைத் தேர்தல் காரணமாக மாதிரி நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என்பதால், ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வணிக நடவடிக்கைகளை பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் தொடங்க முடியாது. 19.15-கிமீ மஞ்சள் பாதை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இது ஆர்.வி.சாலையை பொம்மசந்திரா, சில்க் போர்டு சந்திப்பு மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சிட்டி வழியாக இணைக்கும். குடிமராமத்து பணிகள் (வேயாடக்ட்ஸ் மற்றும் ஸ்டேஷன்களின் கட்டுமானம்) 99.7% நிறைவடைந்த நிலையில், ரயில் பெட்டிகள் இல்லாததால் பாதையின் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. பிப்ரவரி 2020 இல், சீனாவின் அரசுக்குச் சொந்தமான சிஆர்ஆர்சி நான்ஜிங் புசேன் கோ லிமிடெட் (CRRC Nanjing Puzhen Co Ltd) சுமார் நான்கு ஆண்டுகளில் பெங்களூரு மெட்ரோ ரயில் கழத்திற்கு 216 பெட்டிகளை (36 ரயில் என்ஜின்களுடன்) வழங்குவதற்கான ஒப்பந்தத்தை போட்ட‌து. இந்த இரயில் பெட்டிகளில் 21 ஊதா மற்றும் பச்சை பாதையிலும், மீதமுள்ளவை மஞ்சள் பாதையிலும் பயன்படுத்தப்பட வேண்டும். இருப்பினும், 75% பாகங்களை உள்நாட்டில் தயாரிக்க இந்திய நிறுவனம் இல்லாததால், ஆர்டரை நிறைவேற்ற மெட்ரோ ரயில் கழகம் போராடியது. 204 பெட்டிகளை தயாரிப்பதற்காக வங்காளத்தை தளமாகக் கொண்ட திடகார் வாகோன்ஸ் லிமிடெட் (Titagarh Wagons Limited ) உடன் கடந்த ஆண்டு தான் ஒப்பந்தம் போட‌ப்பட்டது. சிஆர்ஆர்சி முன்மாதிரி ரயில் பெட்டியை தயார் செய்தது மட்டுமல்லாமல், இரண்டு ரயில் பெட்டிகளின் பாடி ஷெல்களையும் டிதாகருக்கு அனுப்பியுள்ளது.
முன்மாதிரி ரயில் சோதனை ஓட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் அதே வேளையில்,சீன நிறுவனம் அடுத்த சில மாதங்களில் 2 முழு நீள ரயில் பெட்டிகளாக மாற்றும் என மெட்ரோ ரயில் கழகம் நம்புகிறது. இது குறித்து சவாண் கூறியது: முன்மாதிரி ரயில் ஓட்டத்திற்கு பாதை தயாராக உள்ளது. ரயில்பெட்டிகள் இங்கு வந்ததும், தேவையான சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படும்.
சோதனை ஓட்டம் முழுமையானதாக இருக்கும். ரயில்செட் மற்றும் சிக்னலிங் இடையே சரியான இடைமுகம் இருக்க வேண்டும். இதைத் தொடர்ந்து ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரநிலைகள் அமைப்பு (RDSO) மூலம் அலைவு சோதனைகள் மேற்கொள்ளப்படும். சோதனையின் போது ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், அவற்றை நாங்கள் சரிசெய்ய வேண்டும். அடுத்த கட்டத்தில், நாங்கள் தொழில்நுட்ப அனுமதியைப் பெற்று, சட்டப்பூர்வ பாதுகாப்பு ஆய்வுக்கு செல்வோம். சீனப் பொறியாளர்கள் விரைவில் இந்தியாவுக்கு வந்து, ரயில்களை அசெம்ப்ளி செய்வதற்கும் சோதனை செய்வதற்கும் திறன் பயிற்சி அளிப்பார்கள். மஞ்சள் பாதையில் வணிக நடவடிக்கைகளைத் தொடங்க பெங்களூரு மெட்ரோ ரயில் கழகத்திற்கு குறைந்தபட்சம் 3 முதல் 4 என்ஜினுடன் கூடிய ரயில் பெட்டிகள் தேவைப்படும் என்றார்.