பாராளுமன்ற தேர்தலுக்கு பொதுமக்களிடம் நிதி திரட்ட காங்கிரஸ் முடிவு

புதுடெல்லி: நவ.1-மக்களவை தேர்தலுக்காக பொது மக்களிடம் நிதி கேட்கத் தயாராகிறது காங்கிரஸ். கடந்த ஏழு வருடங்களாக காங்கிரஸ் கட்சிக்குக் கிட்டிவந்த பெரு நிறுவனங்களின் நிதி குறைந்துள்ளது. அதுவே, பாஜகவுக்கு கூடி உள்ளது.
இந்நிலையில், வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சிக்கு பல பிரச்சினைகளை சமாளிக்க வேண்டி உள்ளது. அதில் குறிப்பாக அக்கட்சியின் நிதி, மக்களவை தேர்தலில் செலவழிக்கப் போதுமானதாக இல்லை.
தன்முன் பெரும் சவாலாகி நிற்கும் இப்பிரச்சினையை சமாளிக்க காங்கிரஸ் ஒரு புதிய உத்தியை வகுத்துள்ளது. இதன்படி, காங்கிரஸ் பொதுமக்களிடம் மக்களவை தேர்தலுக்கான செலவுகளுக்கான நிதியை கேட்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிந்துள்ளது. இப்பணி மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோராம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின் துவக்கப்படும் எனத் தெரிகிறது.
ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் சமீபத்திய புள்ளிவிவரப்படி காங்கிரஸிடம் ரூ.805.68 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இதைவிடப் பல மடங்குகள் அதிகமாக பாஜகவிடம் ரூ.6,046.81 கோடி மதிப்பு சொத்துக்கள் உள்ளன. இதற்குக் கடந்த 7 வருடங்களாக இந்தியாவின் பெருநிறுவனங்கள் காங்கிரஸை தவிர்த்து பாஜகவுக்கு தனது நிதியைத் தொடர்ந்து அளித்து வருவது முக்கியக் காரணம்.
கடந்த 2017-18 ஆம் வருடம் மட்டும் இதர தேசியக் கட்சிகளை விட சுமார் 18 மடங்குகள் அதிகமாக பாஜகவுக்கு நிதி குவிந்துள்ளது. இந்தநிலை, வழக்கமாக ஆளும் கட்சியாக யார் வந்தாலும் நிகழ்வது உண்டு. இதை சமாளிக்க ஆம் ஆத்மி கட்சியைப் போல் பொதுமக்களின் முன் நிதியை வசூலிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் மற்றும் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுடன் அமர்ந்து விருந்து உண்ணும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இவ்வாறு விருந்துண்ண வருபவர்கள், கட்சிக்காக நிதியையும் தருவது கட்டாயம் என்றிருந்தது. இந்தவழியில், காங்கிரஸும் தனது முக்கியத் தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா வத்ராவுடன் விருந்து உண்ணும் நிகழ்ச்சிக்கு திட்டமிடுகிறது.இதை ஆம் ஆத்மி போல் அல்லாமல் அதில் சில மாற்றங்கள் செய்து அறிவிக்கவும் யோசனை செய்து வருகிறது. இத்துடன் இணையதளம் வழியாகவும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடமும் நிதியை வசூல் செய்யவும் காங்கிரஸ் தயாராகிறது.நாடு முழுவதிலும் மாநில, பிராந்தியம் மற்றும் தேசியம் என சுமார் 25 அரசியல் கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் ‘இண்டியா’ எனும் கூட்டணியை அமைத்துள்ளது. எனினும், இந்தக் கூட்டணியுடன் தேர்தல் களம் இறங்க காங்கிரஸிடம் போதுமான நிதி இல்லை எனக் கருதப்படுகிறது.