பாராளுமன்ற தேர்தல்- தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை

சென்னை: பிப். 23: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆலோசனை நடத்தி வருகிறார். அவர் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இன்று மக்களவை தேர்தல் தொடர்பான ஆலோசனை நடத்துகிறார். அதன்படி, திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகிய 10 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
ஒவ்வொரு கட்சிக்கும் 10 நிமிடம் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட நேரத்தில் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவார். தேர்தல் தேதி, வாக்குச்சாவடி, நடத்த விதிமுறைகள் பாதுகாப்பு உள்ளிட்டவை ஆலோசனையில் முக்கிய அம்சமாக இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உடன் துணை ஆணையர் தர்மேந்திர சர்மா, நிதேஷ் நியாஸ், அஜய் பாது ஆகியோரும் ஆலோசனையின்போது உடன் உள்ளனர். நாளையும் மக்களவைத் தேர்தல் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆலோசனை நடத்தவிருக்கிறார். நாளை தென்மாநில தேர்தல் அதிகாரிகள், அமலாக்கத் துறை, சுங்கத்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.