பாராளுமன்ற தேர்தல் தேதி நாளை அறிவிப்பு

புதுடெல்லி,மார்ச்.15-பாராளுமன்ற தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்பட உள்ளது. நாளை பிற்பகல் 3 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையம் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நொடியில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகிறது. தேர்தல் அட்டவணை, ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் உள்ளிட்ட 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணை ஆகியனவற்றை நாளை (மார்ச் 16) பிற்பகல் 3 மணிக்கு வெளியிடயிருப்பதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், இது தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ சமூக வலைதளங்களில் நேரடியாக ஸ்ட்ரீம் செய்யப்பட்டும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதைத் தொடர்ந்து ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையை நாளை மாலை 3 மணிக்கு வெளியிட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.முன்னதாக தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் மாநில வாரியான கள ஆய்வை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அண்மையில் ஜம்மு – காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் மற்றும் தேர்தல் பணிக்கு தேவையான துணை ராணுவப் படைகள் குறித்து மத்திய அரசின் உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து மார்ச் 11, 12, 13-ம் தேதிகளில் ஜம்மு – காஷ்மீர் சென்ற இக்குழுவினர், மக்களவைத் தேர்தலுடன் ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கும் தேர்தல் நடத்தலாமா என்பது குறித்து கள ஆய்வுகளை நடத்தினர்.
ஜனநாயகத் திருவிழா: ஒவ்வொரு ஐந்த ஆண்டும் 543 தொகுதிகள் கொண்ட மக்களவைத் தேர்தல் இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவாகவே கொண்டாடப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் அரசியல் களத்தில் அனல் பறக்கும் பிரச்சாரங்கள் தொடங்கிவிடும்.
மக்களவைத் தேர்தலை ஒட்டி இப்போதே தேசியக் கட்சிகள் தத்தம் வேட்பாளர்களை அறிவிக்கத் தொடங்கிவிட்டன. பாஜக இதுவரை இரண்டு கட்டங்களாக 267 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற தேசியக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. மாநிலக் கட்சிகளும் கூட்டணி, வேட்பாளர் அறிவிப்பை தீவிரப்படுத்தியுள்ளன. மேற்குவங்கத்தில் மம்தா 42 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என அறிவித்துள்ளார். இவ்வாறு தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.