பாலாற்றில் 3 அணைகள்

குப்பம்: பிப் .27: தமிழக – கர்நாடகா மாநில எல்லையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள குப்பம் தொகுதியில் கடந்த 7 முறை முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது 8-வது முறையாகவும் குப்பம் தொகுதியில் அவர் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
ஆதலால், தற்போதைய முதல்வரான ஜெகன்மோகன் ரெட்டி, குப்பத்தில் தனது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வேண்டுமென ஆர்வமாக உள்ளார். அதற்காக குப்பம் தொகுதியில் உள்ள ராமகுப்பம் மண்டலம், ராஜுபேட்டையில் ரூ.560.29 கோடி செலவில் உருவாக்கப்பட்ட அனந்த வெங்கட்ரெட்டி ஹந்திரி – நீவா குடிநீர் திட்டத்தை மலர்கள் தூவி, பொத்தான் அழுத்தி திறந்து வைத்தார்.
அதன் பின்னர் ஜெகன்மோகன் ரெட்டி சாந்திரபுரம் மண்டலம், குண்டு செட்டி பல்லி என்னும் இடத்தில் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது:
குப்பம் தொகுதிக்கு வருவாய் வட்டம், நகராட்சி அந்தஸ்து, போலீஸ் சப்-டிவிஷன் போன்றவற்றை வழங்கியது இந்த ஜெகன் அரசுதான். மேலும், தற்போது ஸ்ரீசைலம் அணையில் இருந்து சுமார் 672 கி.மீ. தூரம் வரை குடிநீர் கால்வாய் வெட்டி, அதன் மூலம் கிருஷ்ணா நதி நீரை குப்பம் வரை கொண்டு வந்து வழங்கியதும் அதே ஜெகன் அரசுதான்.
இது தவிர பாலாற்றில் ரூ. 215 கோடி செலவில் 0.6 டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஒரு சிறிய அணையும் கட்டப்படும். இதற்கான பணிகளும் விரைவில் தொடங்கும். ஆக மொத்தம் இங்கு 3 அணைகள் கட்டப்படும். இவ்வாறு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேசினார்.