பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில்பிரதமர் மோடி பேசுகிறார்

புதுடெல்லி ,ஜூலை 13-பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. அன்றே ஜனாதிபதி பதவிக்கு தேர்தலும் நடைபெறுகிறது. இதற்கு ஒருநாள் முன்னதாக 17-ந்தேதி பா.ஜனதா பாராளுமன்ற எம்.பி.க்கள் கூட்டம் நடக்கிறது. வழக்கமாக பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதும் முதல் செவ்வாய்க்கிழமை பா.ஜனதா பாராளுமன்ற எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த முறை 18-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதால் பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு ஒருநாள் முன்னதாக பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பா.ஜனதா எம்.பி.க்கள் அனைவரும் வருகிற 16-ந்தேதி டெல்லிக்கு வரவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அன்று மாலை பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா ஏற்பாடு செய்திருக்கும் கூட்டத்தில் அவர்கள் பங்கேற்கிறார்கள். ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிப்பது குறித்து பயிற்சியும் அப்போது அளிக்கப்படுகிறது. அன்று இரவு பா.ஜனதா எம்.பி.க்களுக்கு ஜே.பி.நட்டா இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். மறுநாள் 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பாராளுமன்ற பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தின் போது பா.ஜனதா எம்.பி.க்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். பா.ஜனதா எம்.பி.க்கள் பலர் ஜனாதிபதி தேர்தலுக்கு முதல் முறையாக வாக்களிக்க உள்ளதால் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.