‘பா.ஜனதா யாரையும் மதிப்பது இல்லை’ – ராகுல்

சில்லாங், பிப். 23-
சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள மேகாலயாவில் நேற்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். சில்லாங்கில் நடந்த பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய அவர், பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் எல்லாம் தங்களுக்கு தெரியும் என்று நினைக்கும் வர்க்கக் கொடுமைக்காரனைப் போன்றவை ஆகும். தாங்கள் அனைத்தையும் புரிந்து வைத்திருப்பதாக நினைக்கிறார்கள். யாரையும் மதிப்பதும் இல்லை. அவர்களுக்கு எதிராக நாம் இணைந்து போராட வேண்டும். மேகாலயாவின் மொழி, கலாசாரம் மற்றும் வரலாற்றை பா.ஜனதா அழிக்க பார்க்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி அதை அனுமதிக்காது. பாரம்பரியம், கலாசாரம் நான் உங்களுடைய பாரம்பரிய ஜாக்கெட்டை அணிந்திருக்கிறேன். உங்கள் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை மதிக்கும் வகையில் இதை அணிந்துள்ளேன். எனது செயல்கள் இந்த ஜாக்கெட்டில் பிரதிபலிக்கின்றன. ஆனால், பிரதமர் வருவதைப் போல நான் இங்கு வந்திருந்தால், இந்த ஜாக்கெட்டை அணிந்து கொண்டு, உங்கள் மதம், கலாசாரம், வரலாறு மற்றும் மொழியைத் தாக்கினால் நான் உங்களை அவமதித்ததாகவே இருக்கும் என்று ராகுல் காந்தி கூறினார். திரிணாமுல் காங்கிரஸ் மீது சாடல் இந்த கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையும் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘திரிணாமுல் காங்கிரசின் வரலாறு உங்களுக்கு தெரியும். மேற்கு வங்காளத்தில் வன்முறைகள், ஊழல்கள் அதிகரித்து உள்ளன. அவர்களது பாரம்பரியத்தை நீங்கள் அறிவீர்கள். கோவா தேர்தலில் மிகப்பெரிய தொகையை அவர்கள் செலவழித்தார்கள். பா.ஜனதாவுக்கு உதவுவதற்கே இந்த யோசனை’ என சாடினார். இதே திட்டத்தை மேகாலயாவிலும் பின்பற்றுவதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, மேகாலயாவில் பா.ஜனதா வலுவடைந்து ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே அந்த கட்சியின் திட்டம் என்றும் கூறினார்.