பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பதவிக்காலம் நீட்டிப்பு?

புதுடெல்லி,ஜன.17- நாடாளுமன்ற மக்களவைக்கு அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன்னோட்டமாக கர்நாடகம் உள்பட 9 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களும் நடக்க உள்ளன. இந்த தேர்தல்களைச் சந்திப்பதற்கு, மத்தியில் ஆளும் பா.ஜ.க. தயாராக தொடங்கிவிட்டது. இந்த நிலையில், தேர்தல் யுக்திகள், திட்டங்கள் வகுப்பதற்காக அந்த கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் தலைநகர் டெல்லியில் நாடாளுமன்ற வீதியில் உள்ள புதுடெல்லி மாநாகராட்சி கவுன்சில் கூட்ட மண்டபத்தில் நேற்று தொடங்கியது.
பிரதமர் மோடி குத்து விளக்கேற்றி தேசிய செயற்குழு கூட்டத்தைத் தொடங்கிவைத்தார். இதில் 35 மத்திய மந்திரிகள், பா.ஜ.க. ஆளும் 12 மாநிலங்களின் முதல்-மந்திரிகள், 37 மாநில பா.ஜ.க. தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் இந்த மாதம் முடிய உள்ளது. இந்த கூட்டத்தில் அவரது பதவிக்காலம்,
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடந்து முடியும் வரை நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய செயற்குழு கூட்டத்தில் முதலில் பேசிய தலைவர் ஜே.பி.நட்டா, “இந்த ஆண்டு 9 மாநில சட்டசபை தேர்தல்களை கட்சி எதிர்கொள்கிறது. இவற்றில் ஒரு மாநிலத்தைக்கூட இழந்து விடக்கூடாது” என குறிப்பிட்டார்.