பிஜேபி உடன் கூட்டணி இல்லை: ஒடிசாவில் பாஜக 18 வேட்பாளர்கள் அறிவிப்பு

ஒடிசா, மார்ச் 26- ஒடிசா மக்களவை தேர்தலுடன் சேர்த்து சட்டப்பேரவை தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெற உள்ளது. இதற்கான வாக்குப் பதிவு மே 13-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனிடையே, ஒடிசா மாநிலத்தை ஆளும் பிஜு ஜனதா தளம் மற்றும் பாஜக ஆகியவை கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க மார்ச் முதல் வாரம் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. ஆனால், மார்ச் 22-ல் ஒடிசா மாநில பாஜக தலைவர் மன்மோகன் சிங் சமல் தேர்தலில் தனியாக களமிறங்க உள்ளதாக திடீரென அறிவித்தார். அப்போது அவர் கூறுகையில், “ பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய தலைமையில் வளர்ந்த இந்தியா மற்றும் வளர்ந்த ஒடிசாவை உருவாக்க தனியாக களமிறங்க உள்ளோம் என்று தெரிவித்தார். இந்த நிலையில், ஒடிசாவில் மொத்தம் உள்ள 21 மக்களவை தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக தடாலடியாக அறிவித்துள்ளது. இதில் மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சம்பல்பூர் தொகுதியிலிருந்து பாஜக சார்பில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, பிஜூ ஜனதா தளத்துடன் பாஜக கூட்டணி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பது இந்த அறிவிப்பு உறுதிப்படுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இதனிடையே, பிஜு ஜனதா தளத்தின் மாநில ஒருங்கிணைப்பு செயலர் பிரணாப் தாஸ் கூறுகையில், “21 மக்களவை மற்றும் 147 சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிடும் எங்கள் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர். பட்நாயக் தலைமையில் நான்கில் மூன்று பங்குக்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிக் கனியை பறிப்பதே எங்களின் இலக்கு என்று தெரிவித்துள்ளார். பல்வேறு கருத்து கணிப்புகளில் ஒடிசாவில் 15 மக்களவை தொகுதி மற்றும் 60 சட்டப்பேரவை தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.