பிஜேபி எம்எல்ஏக்கள் காங்கிரசுக்கு தாவுவதை தடுக்க தீவிர முயற்சி

பெங்களூரு, ஆக. 19: பாஜக எம்எல்ஏக்கள் கட்சி மாறுவதை தடுக்க அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கடும் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
பாஜகவில் உள்ள‌ சில எம்எல்ஏக்கள் காங்கிரஸில் இணையப் போவதாக‌ வெளியான தகவல் அக்கட்சியினரை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து எம்எல்ஏக்கள் கட்சி மாறுவதை தடுக்க‌ களத்தில் இறங்கிய பாஜக மூத்த‌ தலைவர்கள், அவர்களின் கோரிக்கைகளை கேட்க முயன்றனர்.
பாஜக நாடாளுமன்றக் குழு உறுப்பினர் பி.எஸ்.எடியூரப்பா வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் முதல்வர் பசவராஜ பொம்மை, ஆர்.அசோக் மற்றும் பெங்களூரு எம்எல்ஏக்கள் பலர் பங்கேற்றனர். ஆனால், கட்சி நடவடிக்கையில் இருந்து ஒதுக்கி இருப்பதாக கூறப்படும் யஷ்வந்தபூர் எம்எல்ஏ எஸ்.டி.சோம்சேகர் மற்றும் கே.ஆர்.புரம் எம்எல்ஏ பைரதி பசவராஜா கூட்டத்தில் பங்கேற்கவில்லை. எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்திய பி.எஸ்.எடியூரப்பா, யாரும் கட்சி மாற வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.
கூட்டணி ஆட்சியின் போது காங்கிரஸில் இருந்த எஸ்.டி.சோமசேகர், பைரதி பசவராஜு, முனிரத்னா, சிவராம் ஹெப்பர் மற்றும் மஜதவில் இருந்து கே.கோபாலையா ஆகியோர் விலகி, பாஜக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தன‌ர். அவர்களில் பெரும்பாலானோர் காங்கிரஸ் தலைவர்களுடன் தொடர்பில் உள்ளதாகவும், அவர்கள் பாஜகவில் இருந்து விலகப் போவதாக செய்திகள் வெளியாகின. இது வதந்தி என பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.ஆனால், பாஜகவில் இருந்து விலகிக் கொள்ளும் வகையில் எஸ்.டி.சோமசேகரும், சிவராம் ஹெப்பரும் ஒரே மாதிரியான அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். எடியூரப்பா வீட்டில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கோபாலையா, காங்கிரஸில் சேரப் போவதில்லை என்று கூறினார். இது குறித்து பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதை நம்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார். எம்.எல்.ஏ முனிரத்னா, பைரதி பசவராஜ் என்னை போனில் அழைத்தார். நான் காங்கிரஸில் சேர மாட்டேன் என்று தெரிவித்தேன். நான் மீண்டும் அந்தக் கட்சியில் சேரும் பேச்சுக்கே இடமில்லை என்றார்.எஸ்.டி.சோமசேகர் வியாழக்கிழமை செய்தியாளர் சந்திப்பு நடத்தி, தேர்தலின் போது பாஜகவின் உள்ளூர் தொண்டர்கள் என்னை தொந்தரவு செய்தனர். நான் போகமாட்டேன் என்று சொன்னாலும், பாஜகவினர் என்னை கட்சியை விட்டு வெளியே அனுப்பத் தயாராக இருக்கிறார்கள் என தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை இரவு பசவராஜ் பொம்மையைச் சந்தித்து, அவரது தொகுதியில் உள்ள பாஜகவினர் மீது புகார் அளித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.மக்களவைத் தேர்தலுக்கு தயாராகி வரும் காங்கிரஸ், பாஜக‌ மற்றும் மஜத‌ கட்சிகளை சேர்ந்த சில எம்எல்ஏக்களை தங்கள் கட்சியில் இணைத்து, அதிக இடங்களை கைப்பற்ற திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியினர், எதிர்க்கட்சிகளை சேர்ந்த சில எம்எல்ஏக்களை தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. பிஜேபி மற்றும் ஜனதா தளம் கட்சிகளில் இருந்து முக்கிய தலைவர்கள் எம்எல்ஏக்களை இழுக்க காங்கிரஸ் கட்சி வியூம் வகுத்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது