பிஜேபி கூட்டணிக்கு411 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு

புதுடெல்லி: மார்ச்.18-
மக்களவை தேர்தலில் பாஜக 350 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 411 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இண்டியா கூட்டணிக்கு 105 தொகுதிகள் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தல் தொடர்பாக ‘நியூஸ் 18’ ஊடகம் சார்பில் நாடு முழுவதும் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் கூறியிருப்பதாவது: உத்தர பிரதேசத்தில் 80 தொகுதிகள் உள்ளன. இங்கு 77 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெறும். இண்டியா கூட்டணி 2 தொகுதிகள், பகுஜன் சமாஜ் ஒரு தொகுதியில் வெற்றி பெறும்.
பிஹாரில் 40 தொகுதிகள் உள்ளன. இங்கு பாஜக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெறும். இண்டியா கூட்டணிக்கு 2 இடங்கள் மட்டுமே கிடைக்கும்.
மகாராஷ்டிராவில் 48 தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக கூட்டணி 41 தொகுதிகளில் வெற்றி பெறும், இண்டியா கூட்டணிக்கு 7 இடங்கள் கிடைக்கும்.மேற்கு வங்கத்தில் 42 தொகுதிகள் உள்ளன. இங்கு பாஜக கூட்டணி 25 தொகுதிகளில் வெற்றி பெறும். ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கு 17 இடங்கள் கிடைக்கும்.
மத்திய பிரதேசத்தில் 29 தொகுதிகள் உள்ளன. இங்கு கடந்த 2019 தேர்தலில் பாஜக கூட்டணி 28 தொகுதிகளில் வெற்றி பெற்றது. வரும் தேர்தலில் பாஜக கூட்டணி 28 தொகுதிகளில் வெற்றி பெறும். இண்டியா கூட்டணியை சேர்ந்த காங்கிரஸுக்கு ஒரு தொகுதி மட்டுமே கிடைக்கும்.
பஞ்சாபில் 13 தொகுதிகள் உள்ளன. இங்கு இண்டியா கூட்டணியை சேர்ந்த ஆம் ஆத்மி, காங்கிரஸ் எதிரெதிர் அணிகளாக போட்டியிடுகின்றன. பாஜக கூட்டணி 3-வது அணியாக போட்டியிடுகிறது. பஞ்சாபில் காங்கிரஸுக்கு 7, பாஜக கூட்டணிக்கு 3, ஆம் ஆத்மிக்கு ஒரு தொகுதி கிடைக்கும்.
தென் மாநிலங்கள்: தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் பாஜக கூட்டணி 5 தொகுதிகளில் வெற்றி பெறும். இண்டியா கூட்டணியை சேர்ந்த திமுக – காங்கிரஸுக்கு 30 தொகுதிகள் கிடைக்கும்.
கர்நாடகாவில் 28 தொகுதிகள் உள்ளன. இதில் 25 தொகுதிகளை பாஜக கூட்டணி கைப்பற்றும். இண்டியா கூட்டணியை சேர்ந்த ஆளும் காங்கிரஸுக்கு 3 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும்.
கேரளாவில் 20 தொகுதிகள் உள்ளன. இங்கு இண்டியா கூட்டணியை சேர்ந்த மார்க்சிஸ்ட் கூட்டணி,காங்கிரஸ் கூட்டணி தனித்தனியாக போட்டியிடுகின்றன. 3-வது அணியாக பாஜகவும் களத்தில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு 14, மார்க்சிஸ்ட் கூட்டணிக்கு 4 தொகுதிகள் கிடைக்கும். பாஜகவுக்கு 2 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும்.
ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பாஜக – தெலுங்கு தேசம் – ஜனசேனா கூட்டணி, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இங்கு 25 தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றி பெறும். ஒய்எஸ்ஆர்காங்கிரஸுக்கு 7 தொகுதிகள் கிடைக்கும்.
தெலங்கானாவில் ஆளும் காங்கிரஸ், பிஆர்எஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இங்கு 17 தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக 8, காங்கிரஸ் 6, பிஆர்எஸ் கட்சிக்கு 2 தொகுதிகள் கிடைக்கும்.
ஜார்க்கண்டில் 14 தொகுதிகள் உள்ளன. இங்கு பாஜக கூட்டணி 12 தொகுதிகளில் வெற்றி பெறும். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸுக்கு தலா ஒரு தொகுதி கிடைக்கும்.சத்தீஸ்கரில் 11 தொகுதிகள் உள்ளன. இதில் 10 தொகுதிகளை பாஜக கைப்பற்றும். காங்கிரஸுக்கு ஓர் இடம் கிடைக்கும்.