பிஜேபி கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள்

சென்னை மார்ச் 19-
பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் பிஜேபி பாமக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த இரு கட்சிகளுக்கு இடையிலும் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. பிஜேபி கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் சேலத்தில் நடைபெறும் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இந்தக் கூட்டத்தில் பிரதமருடன் கூட்டணி கட்சி தலைவர்களான ஓபிஎஸ் அன்புமணி ராமதாஸ் டிடிவி தினகரன் சரத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாக தெரிகிறது.
மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பதற்காக பாஜக – பாமக இடையிலான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இதில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பாமக – பாஜக இடையிலான கூட்டணி குறித்து இறுதி முடிவை எடுப்பதற்காக திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக உயர்நிலை குழு ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது. கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தலைவர் அன்புமணி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, வடக்கு மண்டல இணை பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி,வழக்கறிஞர் கே.பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில், தீவிர ஆலோசனைக்கு பிறகு, பாஜகவுடன் கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலை சந்திக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று (மார்ச் 19) காலை தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்த்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.
இரு தரப்பினருக்கும் இடையே நடந்த ஆலோசனையில் முடிவில் பாஜக – பாமக இடையிலான கூட்டணி தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் 10 தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புமணி விளக்கம்: இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “10 ஆண்டு காலமாக பாட்டாளி மக்கள் கட்சி டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக இருந்து வருகிறது. வருகிற மக்களவைத் தேர்தலை தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து சந்திக்க கட்சி முடிவு செய்திருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சி தொடரவும், தமிழ்நாட்டில் மாற்றங்கள் வருவதற்காகவும் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். 60 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் மீது மக்களுக்கு வெறுப்பான சூழல் இருக்கிறது. ஒரு மாற்றம் வரவேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஆழமாக இருக்கிறது. அதை பூர்த்தி செய்யவே இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்.
எங்கள் கூட்டணி, தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியா முழுக்க மிகப்பெரிய வெற்றி பெறும். பிரதமர் மோடி மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக நிச்சயமாக தேர்ந்தெடுக்கப்படுவார்” என்று அன்புமணி கூறினார்.
கடந்த ஓரிரு தினங்களாக ஆந்திரா,கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் பிரச்சாரம் செய்து வந்த பிரதமர் மோடி நேற்று கோவையில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில் பங்கேற்றார். அப்போது சாலையின் இருபுறமும் காத்திருந்த பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் கையசைத்தும், மலர்களை தூவியும் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நேற்று கோவையில் தங்கிய பிரதமர் மோடி, இன்று பாலக்காட்டில் நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் சேலம் செல்கிறார். ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு செல்லும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர் சேலம், நாமக்கல், கரூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக சார்பில் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார்.
இதற்காக பொதுக்கூட்டம் நடைபெறும் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் 44 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.