பிஜேபி கூட்டணி ஆட்சி

புதுடெல்லி: ஜூன் 5:
மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்க பிஜேபி தீவிரமாக களம் இறங்கி உள்ளது. மத்தியில் ஆட்சியமைக்க 272 தொகுதிகளை கைப்பற்றவேண்டிய நிலையில் பாஜக கூட்டணி 292 இடங்களை கைப்பற்றியுள்ளது.ஆனால் பிஜேபி கட்சி தனி பெரும்பான்மை பெறவில்லை.பிஜேபி கட்சி மட்டும் 240 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது.தனி பெரும்பான்மை பெற 272 இடங்கள் தேவைப்படும் நிலையில் ஆட்சி அமைக்க கூட்டணி கட்சிகளின் தயவை பிஜேபி நம்பி உள்ளது
இந்நிலையில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் இன்று டெல்லியில் ஆலோசனை நடத்த உள்ளனர். இதற்காக நிதிஷ்குமார் உள்பட பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளனர்.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பீகார் முதல்-மந்திரி தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம், முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையிலான மதசார்பற்ற ஜனதாதளம், மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், சிரங் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி போன்ற கட்சிகள் இடம்பெற்றுள்ளன.இந்த கூட்டத்தில் மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாக தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
பத்து வருடங்களுக்கு பின் மத்தியில் மீண்டும் கூட்டணி ஆட்சி அமைகிறது. இதனால் 2024 மக்களவைத் தேர்தலில் மோடி அலை ஓய்ந்து விட்டதாகக் கருதப்படுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை தேர்தல் முடிவுகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திவிட்டது.
இந்தமுறை 370 தொகுதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்த பாஜகவிற்கு 240 இடங்களே கிடைத்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணிக்கு (என்டிஏ)) எதிர்பார்க்கப்பட்ட 400 க்கு பதிலாக 291 தொகுதிகள் கிடைத்துள்ளன. என்டிஏவிற்கு 11 நிறுவனங்களும், ஊடகங்களும் தேர்தலுக்கு பிந்தயக் கணிப்பில் வெற்றியை அள்ளித் தந்திருந்தன. அனைவரும் ஒரே குரலில் 300 முதல் 400 வரையிலான தொகுதிகள் கிடைக்கும் எனக் கணித்ததும் தவறாகப் போனது.
கடந்த 1999 தேர்தலில் பாஜக 182 தொகுதிகள் பெற்றும் கூட்டணி ஆட்சியை அமைத்திருந்தது. இதில், ‘இந்தியா ஒளிர்கிறது’ எனப் பிரச்சாரம் செய்திருந்தது அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அரசு. இந்தச் சூழலில், 2004 மக்களவைத் தேர்தலில் மீண்டும் பாஜக தலைமையிலான என்டிஏ ஆட்சி அமையும் என பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், பாஜகவுக்கு மேலும் குறைந்து 138 தொகுதிகள் கிடைத்தன.
இதன் காரணமாக, வாஜ்பாய் தலைமையிலான என்டிஏ ஆட்சி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியிடம் பறிபோனது. அப்போது, காங்கிரஸ், பாஜகவை விட ஏழு தொகுதிகள் 145 மட்டுமே அதிகம் பெற்றிருந்தது. எனினும், காங்கிரஸ் தலைமையில் தொடங்கிய கூட்டணி ஆட்சி 2009 மக்களவை தேர்தலுக்கு பிறகும் தொடர்ந்தது. இந்த கூட்டணி ஆட்சி நிலையை 2014-ல் மாற்றிக் காட்டிய மோடி அலை, 2024-ல் ஓய்ந்து விட்டதைக் காட்டுகிறது.
என்டிஏவின் முக்கிய உறுப்பினராக பிஹாரின் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ்குமார் உள்ளார். மற்றொரு உறுப்புக் கட்சியின் முக்கியத் தலைவராக தெலுங்கு தேசத்தின் தலைவர் சந்திரபாபு நாயுடு இடம் பெற்றுள்ளார்.
அவ்வப்போது இந்த இரண்டு தலைவர்களும் முன்வைக்கும் கோரிக்கைகள் பாஜகவிற்கு பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களை சமாளிக்க இண்டியா கூட்டணியின் உறுப்பினர்களையும் பாஜக குறிவைக்கும் வாய்ப்புகள் உள்ளது.
இந்த குறிக்கு என்டிஏவின் பழைய உறுப்பினர்களாக மகராட்டிராவின் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா முதலாவதாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளன. இக்கட்சிக்கு அதிலிருந்து பிரிந்து என்டிஏவில் இருக்கும் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவை விட 2 தொகுதிகள் உள்ளன.
இரண்டாவது குறியில் பஞ்சாபின் சிரோமணி அகாலி தளம் கட்சியும் இருக்கும் வாய்ப்பு உள்ளன. இக்கட்சிக்கு ஓரே ஒரு தொகுதி கிடைத்திருந்தாலும் அதன் நட்பு, பஞ்சாபின் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு பயன் தரும்.
இந்தியாவில் கூட்டணி ஆட்சி புதிதல்ல. இது 1977 இல் ஜனதா கட்சியின் பேரில் துவங்கிய போது நிலைக்கவில்லை. பிறகு காங்கிரஸின் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லை என்றாலும் அவர் பல்வேறு கட்சிகளின் மறைமுக ஆதரவுடன் ஆட்சியை நீட்டித்தார்.
இதுபோல், கட்சிகளை உடைக்கும் புகார் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் மீது ஏற்கெனவே உள்ளது. தற்போதய சூழலில் கூட்டணி ஆட்சி அமைந்தால் மீண்டும் கட்சிகள் உடைப்பும் இருக்குமா? எனும் கேள்வி எழுந்துள்ளது.