பிஜேபி தலைவர்கள் கருத்துக்கு அரபு நாடுகளில் கடும் எதிர்ப்பு

தோஹா, ஜூன்6 – முகமது நபிக்கு எதிராக பாஜக தலைவர்கள் நூபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் கூறியுள்ள சர்ச்சைக்குரிய கருத்து அரபு நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து, முகமது நபிக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பாக குவைத், கத்தார் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வ எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டன. சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இந்த மூன்று நாடுகளிலும், எகிப்து, சவுதி அரேபியா மற்றும் ஓமன் ஆகிய நாடுகளிலும் ஆட்சேபனைக்கு வழிவகுத்தன. இந்த சர்ச்சை விவகாரத்தில் அரபு நாடுளுக்கு இந்தியா பதிலளித்துள்ளது. அரபு நாடுகளின் எதிர்ப்பை தொடர்ந்து, பாஜக நுபுர் சர்மா மற்றும்நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்தது. பாஜக செய்தித் தொடர்பாளர்கள் பொறுப்பில் இருந்து நூபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் நீக்கப்பட்டனர். இந்த நிலையில், பாஜக செய்தித் தொடர்பாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட அறிவிப்பை ஆசியாவிற்கான குவைத்தின் துணை வெளியுறவு மந்திரி வரவேற்றுள்ளார். முன்னதாக, கத்தாரின் வெளியுறவு அமைச்சகம், இந்திய தூதர் தீபக் மிட்டலை வரவழைத்து, ‘முகமது நபிக்கு எதிரான பாஜக தலைவரின் கருத்துக்களை முற்றிலும் நிராகரிப்பதாக எதிர்ப்பு தெரிவித்து’ அதிகாரப்பூர்வ அறிக்கையை கொடுத்தது. பின்னர், இந்த சர்ச்சைக்குரிய விவகாரத்தில் ஈரான் அரசின் கடும் எதிர்ப்பை தெரிவிக்கும் பொருட்டு, ஈரானுக்கான இந்திய தூதர் நேற்று மாலை வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டார். அங்கு ஈரானுக்கான இந்திய தூதர் வருத்தம் தெரிவித்ததோடு, இஸ்லாத்தின் நபிகள் மீதான எந்த விதமான அவமானத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறினார். மேலும், இத்தகைய சர்ச்சை கருத்துக்கள் எந்த வகையிலும் இந்திய அரசின் கருத்துக்களை பிரதிபலிக்கவில்லை. இவை தனிப்பட்ட உறுப்பினர்களின் பார்வையே ஆகும் என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.dailythanthi.com/News/World/saudi-joins-iran-qatar-kuwait-in-row-over-remarks-on-prophet-716189