பிஜேபி பலம் அதிகரிப்பு

புதுடெல்லி: பிப்ரவரி 29- நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களில் 56 பேரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் முடிவடைய உள்ளது. இதையடுத்து, நடைபெற்ற தேர்தலில் பாஜகவின் 20 வேட்பாளர்கள் உட்பட 41 பேர் போட்டியின்றி வெற்றி பெற்றனர்.
உத்தரபிரதேசம் (10), கர்நாடகா (4), இமாச்சல பிரதேசத்தில் (1) உள்ள 15 இடங்களுக்கு போட்டி இருந்ததால் நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. இதில் உ.பி.யில் 8, கர்நாடகாவில் 1, இமாச்சல பிரதேசத்தில் ஒருவர் என 10 பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். கர்நாடகாவில் காங்கிரஸ் 3, உ.பி.யில் சமாஜ்வாதி 2 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்தத் தேர்தலின் மூலம் பாஜகவுக்கு கூடுதலாக 2 இடங்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து, மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 97 ஆகவும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) பலம் 117 ஆகவும் அதிகரித்துள்ளது. மாநிலங்களவையில் இப்போதைக்கு மொத்தம் 240 இடங்கள் உள்ளன. இதில் பெரும்பான்மை (121) பெற என்டிஏ கூட்டணிக்கு இன்னும் 4 இடங்கள் தேவைப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரில் காலி: எனினும், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கு இன்னும் தேர்தல்நடைபெறாததால், அம்மாநிலத்தின் 4 மற்றும் 1 நியமன உறுப்பினர் என மாநிலங்களவையில் 5 இடங்கள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.