பிஜேபி பிரமுகர் கொலை – பதட்டம்

பெங்களூரு, ஜூலை. 27 – கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் பா.ஜ.க யுவமோர்ச்சா மாவட்டச் செயலாளராக இருந்த பிரவீன் நெட்டாரு நேற்று இரவு தனது கடையை மூடிக்கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத சிலர் மோட்டார் சைக்கிளில் வந்து, கோடாரி, வாளால் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவரின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், வழியில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை குறித்து பெல்லாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரவீன் நெட்டாருவின் கொலைக்கு எதிராக பா.ஜ.க உறுப்பினர்கள் பலர் இரவிலிருந்து தெருவில் அமர்ந்து குற்றவாளியை விரைவில் கைது செய்ய ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தனது டுவிட்டர் பக்கத்தில், “தட்சிண கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த எங்கள் கட்சித் தொண்டர் பிரவீன் நெட்டாரு காட்டுமிராண்டித்தனமாகக் கொல்லப்பட்டது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற கொடூரச் செயல்களில் ஈடுபடுபவர்கள் விரைவில் கைது செய்யப்பட்டு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள். பிரவீனின் ஆத்மா சாந்தியடையட்டும். இந்த துக்கத்தைத் தாங்கும் சக்தியை அவரின் குடும்பத்தாருக்கு இறைவன் வழங்கட்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.
பி ஜே பி கட்சியின் இளம் பிரமுகர் பிரவீன் நெட்டாரு என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது மாவட்டம் முழுக்க நிலைமை பதட்டமாக இருப்பதுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இடையேயும் பிரவீன் நெட்டாரு கொலையை கண்டித்து புத்தூரில் பொளுவாரி என்ற இடத்தில் கல்வீச்சு தாக்குதல்கள் நடந்துள்ளன. மங்களூருக்கு சென்றுகொண்டிருந்த பஸ் ஒன்றின் மீது சில இளைஞர்கள் கல்வீச்சு நடத்தி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இதக்கிடையில் பிரவீனின் கொலையை கண்டித்து மாவட்டத்தின் பல பகுதிகளில் போராட்டம் நடத்த முற்பட்டவர்களை போலீசார் தடுத்ததுடன் போலீசார் எங்கும் மக்கள் சேராதவாறு கவனம் செலுத்தி வருகிறார்கள். கடபாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்திருப்பதுடன் புத்தூரின் விவேகானந்தா , மற்றும் அம்பிகா கல்வி நிறுவனங்கள் உட்பட மற்ற தனியார் பள்ளி கூடங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த மாவட்டத்தின் சுல்லா , கடபா மற்றும் புத்தூரு தாலூகாக்களில் நிலைமை பதட்டமாக இருப்பதுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மங்களூர் , உடுப்பி ஆகிய பகுதிகளிலிருந்து கூடுதல் போலீஸ் படைகள் வருவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பெல்லாரியில் நீறு பூத்த நெருப்பாக நிலைமைகள் இருப்பதுடன் ஒரே வாரத்தில் இரண்டு கொலைகள் நடந்திருப்பது பதட்டங்களுக்கு காரணமாயுள்ளது. பிரவீன் கொலை செய்யப்பட்ட இடத்தை போலீசார் காவல் காத்துவருவதுடன் தடவியல் குழுக்களும் அங்கு நேரில் வந்து ஆய்வு செய்துள்ளனர். தக்ஷிண கன்னடா மாவட்ட அதிகாரி சம்பவ இடத்திற்கு வரும் வரை இறந்த உடலை கொண்டு செல்ல விட மாட்டோம் என மருத்துவமனை எதிரில் சேர்ந்துள்ள உறவினர்கள் மற்றும் ஹிந்து ஆதரவு இயக்கங்களை சேர்ந்தவர்கள் அடம் பிடித்து வருகின்றனர். போலீஸ் உயர் அதிகாரி குஷிகேஷ் சோனாவனே, புத்தூர் உதவி ஆணையர் கிரிஷ் நந்தன் ஆகியோர் வந்து போராட்டக்காரர்களை மனம் மற்றும் முயற்சியில் ஈடுபட்டும் எந்த பயனும் இல்லை. நள்ளிரவு 1.30 மணியளவில் மாவட்ட அதிகாரி டாக்டர் ராஜேந்திரா கே வி வந்து போராட்டக்காரர்களிடம் பேசியுள்ளார்.