பிஜேபி முதல் வேட்பாளர் பட்டியல்

புதுடெல்லி: மார்ச் 1-வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான பாஜக முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதற்காக, பிரதமர் மோடி தலைமையில் பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம் நேற்று (வியாழக்கிழமை) பின்னிரவில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மக்களவைத் தேர்தலுக்கான பாஜக முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. பின்னிரவு 10.30 மணிக்குத் தொடங்கிய இந்த ஆலோசனை 4 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜெபி நட்டா, மத்திய அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத் சிங், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
மக்களவைத் தேர்தலுக்கான தேதிகளை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பதற்கு முன்னதாகவே பாஜக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட ஆயத்தமாகி வருவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலிலேயே நேற்றைய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாகவும் தெரிகிறது.
அதுவும் குறிப்பாக, மக்களவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் முன்னதாக உத்தரப் பிரதேசத்தில் தனது செல்வாக்கு குறைந்த மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை முதலில் வெளியிட பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சியின் தேசியத் தலைவர் நட்டா, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பாஜகவுக்கு சாதகமற்ற தொகுதிகள் பற்றி ஆலோசனை நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக வேட்பாளர்கள் பட்டியல் எப்போதுமே கவனம் பெறும். காரணம். ஏனெனில், அதன் பட்டியலில் தெரிந்த பிரபலமான முகங்களைக் கூட கைவிட்டுவிட்டு புதிய முகங்களுக்கு வாய்ப்பு கொடுப்பது என்பது சாதாரணமாக நடந்துவிடும். அதனால் மக்களவைத் தேர்தல் 2024-க்கான பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல் எதிர்பார்ப்பைப் பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் 2வது வாரத்தில் வெளியிடப்பட்டு தேர்தல் ஏப்ரல் 2வது வாரம் தொடங்கி நடத்தப்படலாம் என ஊகங்கள் நிலவுகின்றன.