பெங்களூரு, ஆக. 12: பிட்காயின் வழக்கு முறைகேடு தொடர்பான விசாரணை சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் (எஸ்ஐடி) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆவணங்கள் விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மாநில அரசு, உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஹேமந்த் சந்தன் கவுடர் தலைமையிலான தனி அமர்வு, பிட்காயின் வழக்கு முறைகேடு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீகிருஷ்ண ரமேஷ், சுனிஷ் ஹெக்டே, பிரசித்த ஷெட்டி மற்றும் ஹேமந்த் முத்தப்பா ஆகியோர் எஃப்ஐஆர் மற்றும் சட்ட நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, அவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சி.எச்.ஹனுமந்தராயா மற்றும் சந்தேஷ் சௌதா ஆகியோர், தங்களின் மனுதாரர்கள் மீது, தும்கூர், பெங்களூரு ஊரகம் மற்றும் பெங்களூரு சிசிபி உள்ளிட்ட இடங்களில், சட்டத்துக்கு விரோதமாக தனித்தனி எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.அதனைத் தொடர்ந்து அட்வகேட் ஜெனரல் கே. சசிகிரண் ஷெட்டி வாதாடுகையில், ‘பிட்காயின் முறைகேடு தொடர்பான விசாரணை எஸ்ஐடியிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கைகள் அடுத்த விசாரணையின் போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். எனவே, இது தொடர்பான விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் விசாரணையை வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தது.