பிப். 17ல் அமலாக்கத்துறை முன் முதல்வர் கெஜ்ரிவால் ஆஜராக‌ சம்மன்

புதுடெல்லி, பிப். 8: சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, பிப்.17ல் அமலாக்கத்துறை (இ.டி.) அதிகாரிகள் முன் ஆஜராகும்படி, டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
5 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என அமலாக்கத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், மனுவை விசாரித்த நீதிபதி திவ்யா மல்ஹோத்ரா அவரை நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.
விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து ஒத்துழைக்கவில்லை என கடந்த பிப்ரவரி 3ம் தேதி கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை புதிய வழக்கு பதிவு செய்தது.இப்போது நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு பதிலளித்த ஆம் ஆத்மி, நீதிமன்ற உத்தரவை ஆய்வு செய்து உரிய முடிவு எடுப்பதாக கூறியுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்திற்கு நீர் வாரிய டெண்டர்களை சட்டவிரோதமாக ஒதுக்கியதாக கூறப்படும் லஞ்சப் பணத்தை ஆம் ஆத்மி பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை நேற்று குற்றம் சாட்டியது.சில நாட்களுக்கு முன், கெஜ்ரியின் உதவியாளர்கள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. பணமோசடி வழக்கு தொடர்பாக, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலர் மற்றும் பிற நபர்களின் வீட்டில், இரண்டு நாட்களுக்கு முன், அமலாக்க இயக்குனரகம் சோதனை நடத்தியது. டெல்லி ஜல் போர்டின் டெண்டர்களை வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாகவும், அதன் மூலம் கட்சிக்கு தேர்தல் நன்கொடைகள் சேகரிக்கப்பட்டதாகவும் ED விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் பேரில் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பிபவ் குமார் உள்ளிட்டோரின் சொத்துக்களில் சோதனை நடத்தப்பட்டது. தேசிய தலைநகர் பிராந்தியத்தில் 10 முதல் 12 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. டிஜேபி உறுப்பினர் ஷலப் குமார், ராஜ்யசபா உறுப்பினர் என்.டி.குப்தா, பட்டய கணக்காளர் பங்கஜ் மங்கல் உள்ளிட்ட பலரது வீடுகளில் காலை 7 மணி முதல் சோதனை நடத்தப்பட்டது.
இது குறித்து பதிலளித்த ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி, ஆம் ஆத்மி தலைவர்களை பயமுறுத்துவதற்காக இந்த சோதனைகள் நடத்தப்படுவதாக புகார் கூறினார். கெஜ்ரவாலின் உறவினர்கள் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையில் ரூ.1.97 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.