பிப்.29ல் பெங்களூர் மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்

பெங்களூரு, பிப். 27- பெங்களூரு மாநகராட்சியின் (பிபிஎம்பி) 2024-25 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் பிப்ரவரி 29 ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் தொடர்ந்து நான்காவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளனர்.
பிபிஎம்பியின் நிதித் துறையின் சிறப்பு ஆணையர் சிவானந்த் கலகேரி இந்த வியாழக்கிழமை பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
இந்த முறை பட்ஜெட் 12 முதல் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.மக்களவைத் தேர்தல் கால அட்டவணை மார்ச் முதல் வாரத்தில் வெளியிடப்படும் நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதைக் கருத்தில் கொண்டு வியாழக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. 2023-24 ஆம் ஆண்டில் ரூ.11,158 கோடி வருவாய் எதிர்பார்த்து, ரூ.11,157 கோடி ரூபாய் செலவுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. மாநில அரசு கூடுதல் மானியம் தருவதாகக் கூறி மாநகராட்சி பட்ஜெட் அளவை ரூ.11,885 கோடியாக உயர்த்தியது.
இந்த ஆண்டு அதிக வருவாயை எதிர்பார்க்கும் பட்ஜெட் அளவு ரூ.12,000 கோடி முதல் ரூ.13,000 கோடி அளவில் இருக்க வாய்ப்புள்ள‌து.
பிபிஎம்பியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களின் பதவிக்காலம் முடிவடைந்து மூன்றரை ஆண்டுகள் கடந்தும், இதுவரை தேர்தல் நடத்தப்படவில்லை. அதனால், நான்காவது ஆண்டாக, அதிகாரிகள் பட்ஜெட் தாக்கல் செய்கின்றனர்.