பிரஜ்வல் ரேவண்ணாவின் 3,000 ஆபாச வீடியோக்களை ரிலீஸ் செய்தது யார்

பெங்களூர், மே 1- 300 பெண்களுடன் 3000 ஆபாச வீடியோக்களுடன் பிரஜ்வல் ரேவண்ணா சிக்கிய விவகாரத்தில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்களை வெளியிட்டது யார் என்பதுதான் இந்த சர்ச்சை. பாஜக கூட்டணியின் ஜேடிஎஸ் வேட்பாளராக ஹாசன் தொகுதியில் போட்டியிட்டவர் பிரஜ்வல் ரேவண்ணா. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன். ஹாசன் தொகுதி சிட்டிங் எம்பியும் பிரஜ்வல்தான். ஹாசன் தொகுதியில் ஏப்ரல் 26-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் முன்னரே பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் கசியவிடப்பட்டு பெரும் பிரளயமே வெடித்தது. தற்போது ஜேடிஎஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் ரேவண்ணா.
இந்த வீடியோக்கள் குறித்து எஸ்ஐடி விசாரணையும் நடைபெற்று வருகிறது. இதனிடையே பிரஜ்வல் ரேவண்ணா வீடியோக்களை கசியவிட்டது யார் என்ற விவாதம் புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது. யார் யார் என்ன கருத்துகளை தெரிவித்துள்ளனர் என்பதன் தொகுப்பு: கார்த்திக் கவுடா (பிரஜ்வல் ஓட்டுநர்): பிரஜ்வல் ரேவண்ணாவின் 3,000 ஆபாச வீடியோக்களுடனான பென் டிரைவ்வை நான் பாஜகவின் தேவராஜே கவுடாவிடம்தான் கொடுத்தேன். எனக்கு எந்த ஒரு காங்கிரஸ் தலைவரையும் தெரியாது. எந்த ஒரு காங்கிரஸ் தலைவரை சந்தித்தும் நான் பென் டிரைவ்வை கொடுக்கவே இல்லை. தேவராஜே கவுடா (பாஜக): கார்த்திக் கவுடாதான் காங்கிரஸ் தலைவர்களுக்கு நெருக்கமானவராக இருந்தார்.
அவர்தான் இந்த வீடியோக்களை காங்கிரஸ் தலைவர்கள் மூலமாக வெளியிட்டிருக்கிறார். பாஜக கூட்டணியின் வேட்பாளரான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக பாஜகவை சேர்ந்த நான் வீடியோக்களை வெளியிடுவேனா? இந்த வீடியோக்களால் உடனடியான அரசியல் ஆதாயம் என்பது ஹாசனில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரேயாஸ் பட்டேலுக்குதான். கார்த்திக் கவுடாதான் ஸ்ரேயாஸுடன் நெருக்கமாக இருந்தார்.
குமாரசாமி (முன்னாள் முதல்வர், பிரஜ்வல் சித்தப்பா): வீடியோக்களை ரிலீஸ் செய்த மகாநாயக் (துணை முதல்வர் டிகே சிவகுமார்) பெண்களின் முகங்களை ப்ளர் செய்து வெளியிட்டிருக்கலாம். அந்த பெண்கள் குடும்பம் என்ன பாடுபடும்? இதுதான் டிகே சிவகுமார், பெண்களை மதிக்கும் இலட்சணம். இத்தகைய டிகே சிவகுமாரை தார்மீக அடிப்படையில் அமைச்சரவையில் இருந்து உடனடியாக சித்தராமையா நீக்க வேண்டும்.