பிரஜ்வல் விவகாரத்தில் குமாரசாமி, கைவண்ணம் உள்ளது: டி.கே.சுரேஷ் எம்பி

பெங்களூரு, மே 2- ‘பிரஜ்வல் விவகாரத்தில் எச்.டி.குமாரசாமி, பாஜகவின் கைவண்ணம் உள்ளது. வழக்கில் இருந்து தப்பிக்கவே காங்கிரஸையும், டி.கே.சிவகுமாரையும் குற்றம் சாட்டுகிறார்கள் என்று காங்கிரஸ் எம்பி டி.கே. சுரேஷ் தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது, ‘டி.கே.சிவகுமாரிடம் பென் டிரைவ் இருந்தால் முன்னதாகவே வெளியிட்டிருக்க‌ முடியும். பென் டிரைவ் ஹாசன் மாவட்டத்தில்தான் வெளியிட‌ப்பட்டது, இதில் உள்ளூர் தலைவர்களின் கைவண்ணம் உள்ளது. இதற்கு கூட்டணி தலைவர்களும், குமாரசாமியும் உடந்தையாக உள்ளனர். அந்த வீடியோக்கள் நான்கு ஆண்டுகள் பழமையானவை என்பதை எச்.டி.ரேவண்ணா ஒப்புக்கொண்டுள்ளார். அவரது குடும்பத்தினர் ஒவ்வொருவரும் இது குறித்து கருத்து தெரிவித்த நிலையில், வேறு யாரையும் ஏன் குற்றம் சாட்ட வேண்டும்’ என கேள்வி எழுப்பினார். இந்த வழக்கில் குமாரசாமியின் குற்றச்சாட்டு முக்கியமா? அந்த பகுதி பாதிக்கப்பட்ட ஐநூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு பாதுகாப்பு, நீதி முக்கியமா?. தங்களின் பொய்களை மறைக்க தொடர்ந்து அறிக்கை விடுகிறார்கள் என்றார். ஜனவரி 27ஆம் தேதி சூரஜ் ரேவண்ணா இந்த விவகாரம் தொடர்பாக டி.கே.சிவகுமாரை சந்தித்ததாக கூறப்படுவது குறித்து பதில் அளித்த சுரேஷ், ‘இதில் உண்மை இல்லை. வேறு வேலை விஷயமாக சிவகுமாரை சூரஜ் சந்தித்திருக்கக்கூடும் என்றார்.