பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி,: ஏப்ரல் . 25 காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் நேற்று காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “தேர்தல் வந்ததும் நாட்டிலுள்ள வேலையில்லா திண்டாட்டம், பண வீக்கம் போன்ற பெரிய பிரச்னைகள் பற்றி மோடி பேசுவார் என்று நினைத்தோம். ஆனால் பிரதமர் மோடியோ தன் அரசாங்கம் மீதும், கட்சி மீதும் போதிய நம்பிக்கை இல்லாததால் பிரச்னைகள் பற்றி பேச மறுக்கிறார்.
கடந்த 10 ஆண்டுகால பாஜ ஆட்சியில் மோடி இரண்டு இந்தியாவை உருவாக்கி விட்டார். ஒன்று பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட காய்கறி வியாபாரி அழும் இந்தியா, மற்றொன்று ஜி-20 உச்சி மாநாட்டில் நாட்டின் வறுமையை மறைக்க திரை மூடிய கவர்ச்சி இந்தியா” என்று குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஏழைகளை பற்றி பேசுவது தவறா? ஏழைகளின் நலனில் அக்கறை செலுத்துவதில் உங்களுக்கு என்ன பிரச்னை? சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது பற்றி காங்கிரஸ் பேசுகிறது. அதில் உங்களுக்கு என்ன பிரச்னை? மக்களை பிரதிநிதித்துவப்படுத்த பாஜ ஏன் விரும்பவில்லை. பாஜ சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவானதா? எதிரானதா?. இந்த கேள்விக்கு ஆம், இல்லை என்று ஏதாவது ஒரு பதிலை சொல்ல வேண்டும்” என்று கேள்விஎழுப்பி னார்.