பிரதமர் மோடி தலைமையிலான குழு நாளை கூடுகிறது

புதுடெல்லி: மார்ச் 13 புதிய தேர்தல் ஆணையர்களை நியமிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழு டெல்லியில் நாளை கூடுகிறது. இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பதவி வகிக்கிறார். தேர்தல் ஆணையர்களாக அனூப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் பணியாற்றி வந்தனர்.
இதில் அனூப் சந்திர பாண்டே கடந்த பிப்.15-ல் ஓய்வு பெற்றார். மற்றொரு தேர்தல் ஆணையர் அருண் கோயல் கடந்த 9-ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த சூழலில் புதிய தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இதன்படி மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய உள்துறை செயலாளர், மத்திய பணியாளர் நலத் துறை செயலாளர் அடங்கிய உயர் நிலைக் குழு தீவிர ஆலோசனை நடத்தி 2 தேர்தல் ஆணையர்களின் பதவிக்கு தலா 3 பேரின் பெயர்களை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளது.
இதைத் தொடர்ந்து 2 தேர்தல் ஆணையர்களை இறுதி செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழு டெல்லியில் நாளை கூடுகிறது.

இந்த குழுவில் மூத்த மத்திய அமைச்சர் ஒருவர், மக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.