பிரதமர் மோடி திருப்பூர்மதுரை கூட்டங்களில் பங்கேற்பு

தூத்துக்குடி: பிப். 27: தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் இன்றும், நாளையும் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. பிரதமர் மோடி அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க இரண்டு நாள் பயணமாக இன்று திருப்பூர் மற்றும் மதுரை வருகிறார். தூத்துக்குடி மற்றும் நெல்லையில் நாளை நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டு பேசுகிறார். இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் வரும் மோடி அங்கு அண்ணாமலை, நடத்திய யாத்திரையின் நிறைவு விழாவில் பங்கேற்கிறார்.
இந்த விழாவில் கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் மாலை 5.15 மணிக்கு, மதுரையில், ‘எதிர்காலத்தை உருவாக்குதல் – வாகன எம்எஸ்எம்இ தொழில்முனைவோருக்கான டிஜிட்டல் மொபிலிட்டி’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அதன்பின்னர் இரவு 7 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மோடி தரிசனம் செய்கிறார். இன்று இரவு மதுரையில் தங்குகிறார். பின்னர் நாளை, காலை 9.45 மணியளவில், தூத்துக்குடியில் சுமார் 17,300 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை தொடக்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி, டிஜிபி சங்கர் ஜிவால், ஏடிஜிபி அருண், ஐஜிக்கள் பவானீஸ்வரி, கண்ணன், நரேந்திர நாயர், கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் இன்றும், நாளையும் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. பிரதமர் வருகையை முன்னிட்டு கடலோர பாதுகாப்பு படை தீவிர ரோந்தில் ஈடுபட்டுள்ளதால் தடை விதிக்கபப்ட்டுள்ளது.