பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை

சென்னை: மார்ச் 14:
பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரி மாவட்டம் வருகிறார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையம் வரும் பிரதமர் அங்கிருந்து கன்னியாகுமரி வருகிறார். விமான நிலையத்தில் அண்ணாமலை, எல்.முருகன் உள்ளிட்டோர் பிரதமரை வரவேற்கின்றனர். விமான நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி வரும் பிரதமர் அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து சாலை மார்க்கமாக பொதுக்கூட்ட மைதானத்திற்கு செல்கிறார். காலை 11.15 முதல் 12.15 வரை விவேகானந்தர் கல்லூரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இந்த பொதுக்கூட்டம் முடிவடைந்து, பகல் 12.15க்கு அவர் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். மீண்டும் 6வது முறையாக வருகிற 18ம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, கோவையில் நடக்கும் கூட்டத்தில் பேசுகிறார். 19ம் தேதி சேலம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். 22ம் தேதி மதுரைக்கும் வர உள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரி வருவதை தொடர்ந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பொதுக்கூட்டம் நடைபெறும், அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானம் போலீஸ் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.