பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: பிப்.22-
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் மீட்புப் பணியில் ஈடுபட்ட இந்திய வீரர்களை பிரதமர் மோடி சந்தித்து பாராட்டு தெரிவித்தார். அப்போது பேசிய அவர், “சர்வதேச அரங்கில் இந்தியா மீதான நன்மதிப்பு அதிகரித்து வருகிறது” என்று தெரிவித்தார்.
கடந்த 6-ம் தேதி துருக்கி, சிரியாவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இருநாடுகளிலும் இதுவரை 48,000 பேர் உயிரிழந்துள்ளனர். 1.22 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து தேசியபேரிடர் மீட்புப் படை வீரர்கள்,ராணுவ மருத்துவக் குழுக்கள் துருக்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த குழுக்கள் ‘ஆபரேஷன் தோஸ்த்’ என்ற பெயரில் துருக்கியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மீ்ட்புப் பணிகளை மேற்கொண்டன.
இதேபோல சிரியாவுக்கு உணவுப் பொருட்கள், மருந்துகள் என ஏராளமான நிவாரண உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டன.
ஐ.நா.சபை சார்பில் சிரியாவில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருக்கும் அமைதிப்படையில் இந்திய வீரர்கள் பெரும்பான்மையாக இடம்பெற்றுள்ளனர்.
சர்வதேச அரங்கில் இந்தியா மீதான நன்மதிப்பு அதிகரித்து வருகிறது.
உலகில் எந்தப் பகுதியில் பேரிடர் ஏற்பட்டாலும் முதலில் உதவிக்கரம் நீட்டும் நாடாக இந்தியா இருக்கிறது. நேபாள நிலநடுக்கம், மாலத்தீவு நெருக்கடி, இலங்கையில் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட இக்கட்டான நேரங்களில் அந்த நாடுகளுக்கு இந்தியா உதவியது.
பேரிடர் காலங்களில் நமது மீட்புதிறனை மேலும் அதிகரிக்க வேண்டும். உலகின் மிகச் சிறந்த மீட்புப் படையை கொண்ட நாடு என்ற அடையாளத்தை இந்தியா பெற வேண்டும். துருக்கி, சிரியாவில் மீட்புப் பணியில் ஈடுபட்ட இந்திய வீரர்களால் நமது நாட்டின் கவுரவம் உயர்ந்துள்ளது. அனைவரையும் மனதார பாராட்டுகிறேன்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.