பிரதமர் யார் என 48 மணி நேரத்தில் அறிவிப்போம் – காங்கிரஸ்

புதுடெல்லி: மே 31 –
இந்தியா கூட்டணி 272 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும், பிரதமர் யார் என்பதை 48 மணி நேரத்துக்குள் அறிவிப்போம் என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். 18வது மக்களவைக்கான 7 கட்ட தேர்தலில் 6 கட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில், 7 மற்றும் கடைசிக் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது. தொடர்ந்து ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில் காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்தியா கூட்டணி அறுதி பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். கர்நாடகா, தெலங்கானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் காங்கிரசுக்கு அமோக வெற்றி கிடைக்கும். மத்தியபிரதேசம், சட்டீஸ்கர், அசாம் மாநிலங்களில் காங்கிரஸ் மேலும் வலுப்பெறும்.
உத்தரபிரதேசத்திலும் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும். தேர்தல் முடிவு வெளியான 48 மணி நேரத்துக்குள் பிரதமர் யார் என்பது முடிவு செய்யப்படும். தேர்தல் முடிவுக்குப்பின் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் இந்தியா கூட்டணியில் சேரலாம். அவர்களை கூட்டணியில் சேர்ப்பது பற்றி கூட்டணி தலைவர்கள் முடிவெடுப்பார்கள்.
இந்தியா கூட்டணிக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இரண்டே வித்தியாசங்கள்தான் உள்ளன. இந்தியா கூட்டணியில் நேர்மை, மனிதநேயம் இருக்கிறது. இந்தியா கூட்டணி வெற்றிக்கு பிறகு பெரிய மனதுடன் இருக்கும். பழி வாங்கும் அரசியல் இருக்காது. 2004 மக்களவை தேர்தலில் பாஜவின் இந்தியா ஔிர்கிறது என்ற முழக்கத்தை மீறி, காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது போன்று தற்போது நிகழும். இவ்வாறு அவர் கூறினார்.

  • மோடி தியானம் இருப்பது ஏன்?
    விவேகானந்தர் பாறையில் மோடி தியானம் செய்வது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெய்ராம் ரமேஷ், “கடந்த 2022 செப்டம்பர் 7ல் ராகுல் காந்தி விவேகானந்தர் நினைவிடத்தில் இருந்துதான் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை தொடங்கினார். தேர்தல் தோல்விக்கு பிறகு தன் வாழ்க்கை என்னவாக போகிறது என்பதை சிந்திக்கவே விவேகானந்தர் பாறையில் மோடி தியானம் செய்ய போகிறார்” என்று பதில் கூறினார்.