பிரதமர் வலியுறுத்தல்

புதுடெல்லி: டிச.5- 5 மாநில பேரவைத் தேர்தல் தோல்வியின் விரக்தியை நாடாளுமன்றத்துக்குள் எதிர்க்கட்சிகள் கொண்டு வர வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை நாடாளுமன்ற கட்டிடத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: நடந்து முடிந்த 5மாநிலத் தேர்தல்முடிவுகள் வந்துவிட்டன. எதிர்க்கட்சியாக இருந்தாலும் அவர்களுக்கு நான் அறிவுரை கூற விரும்புகிறேன். சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் கூற வேண்டுமானால், எதிர்க்கட்சிகளுக்கு நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஒரு பொன்னான வாய்ப்பு.
5 மாநிலத் தேர்தல் தோல்வியின் விரக்தியை வெளிக்காட்டுவதற்கான திட்டங்களை வகுப்பதற்குப் பதிலாக, அவர்கள் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவேண்டும். தேர்தல் தோல்வியின் விரக்தியை நாடாளுமன்றத்துக்குள் அவர்கள் கொண்டு வரக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.