பிரம்மாண்ட படத்தில் கால் டாக்ஸி டிரைவராக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

கின்ஸ்லின் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கால் டாக்ஸி டிரைவராக நடிக்க உள்ளாராம்.
தமிழ், தெலுங்கில் பிசியான நடிகையாக வலம்வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இன்று பிறந்தநாள் கொண்டாடும் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அவர் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ‘டிரைவர் ஜமுனா’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ‘வத்திக்குச்சி’ படத்தின் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கவுள்ளார். இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 18 ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பாக, எஸ்.பி.செளத்ரி மிகப் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழிகளில் தயாராக உள்ளது. இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார்.
கிரைம் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகவுள்ளது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கால் டாக்ஸி டிரைவராக நடிக்கிறார். அவருடன் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இன்றைய கால கட்டத்தில், தினசரி வாழ்க்கையில், கால் டாக்ஸி டிரைவர்களை கடந்து போய் வருகிறோம். ஒரு நடுத்தர குடும்பத்து பெண், கால் டாக்ஸி டிரைவரை, மையமாக கொண்டு கிரைம் திரில்லர் படமாக இது உருவாக உள்ளதாக படக்குழு தெரிவித்து உள்ளது.