பிரம்மோற்சவம் நிறைவடைந்தது

திருமலை:அக். 25: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் 18 முதல் 26-ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்றது. இதையடுத்து,
நவராத்திரி பிரம்மோற்சவ விழா கடந்த 15-ம் தேதி இரவு திருமலையில் பெரிய சேஷவாகன சேவையுடன் கோலாகலமாக தொடங்கியது.
வருடாந்திர பிரம்மோற்சவத்தில் கொடியேற்றமும், தேர்த்திருவிழா வும் நடைபெறும். அதற்கு ஆந்திர முதல்வர் முதல் நாளே பட்டு வஸ்திரத்தை அரசு சார்பில் காணிக்கையாக வழங்கிடுவார். ஆனால், நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இதெல்லாம் கிடையாது. தங்கதேரோட்டமும், பூப்பல்லக்கு சேவையும் நவராத்திரி பிரம்மோற் சவத்தின் சிறப்பம்சங்களாகும். மற்றபடி அனைத்து வாகன சேவைகளும் வருடாந்திர பிரம்மோற்சவத்தை போலவே நடத்தப்படும்.
இந்நிலையில், நிறைவு நாளான கடந்த 23-ம் தேதி (திங்கட்கிழமை) காலை, வராக சுவாமி கோயில் அருகே, குளக்கரையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பரும், உடன் சக்கரத்தாழ்வாருக்கும் சிறப்பு திருமஞ்சன சேவை நடந்தது.
இதனை தொடர்ந்து கோயில் குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரியும் நடைபெற்றது. அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் கோவிந்தா … கோவிந்தா எனும் பக்த கோஷமிட்டவாறு புனித நீராடினர். தீர்த்தவாரி நடந்ததால் நேற்று முன் தினம் முழுவதும் கோயில் குளத்தில் குளிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து இரவு ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர், தங்க திருச்சியில் (பல்லக்கில்) பட்டாபிஷேக கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இத்துடன் நவராத்திரி பிரம்மோற்சவமும் நிறைவடைந்தது.