பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி

கேப் டவுன்: ஆக. 4: பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு பிரிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கூட்டமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுகிறது. 2023-ம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் 15-வது உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்கா நாட்டில் நடைபெற உள்ளது என அந்நாட்டு அதிபர் சிரில் ரமபோசா தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் ஆகஸ்ட் 22 முதல் 24-ம் தேதி வரை பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஆவலுடன் உள்ளேன் என தெரிவித்தார்.இதுதொடர்பாக, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். அப்போது இருதரப்பு ஒத்துழைப்பில் முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் பேசினர். 2023-ல் இருதரப்பு ராஜதந்திர உறவுகள் தொடங்கப்பட்டதன் 30-வது ஆண்டு விழா கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று நெருக்கடி மற்றும் அதனைத் தொடர்ந்து சர்வதேச கட்டுப்பாடுகள் ஆகியவற்றுக்குப் பின்னர் முதல் முறையாக பல்வேறு நாடுகளின் தலைவர்கள் நேரடியாகப் பங்கேற்கக் கூடிய முதல் உச்சி மாநாடாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.