பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயண நாட்கள் குறைப்பு


புதுடில்லி, ஏப். 15- கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயண நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி, 26ம் தேதி நடந்த நம் குடியரசு தின விழாவில், சிறப்பு விருந்தினராக, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கேற்பதாக இருந்தது. எனினும், அப்போது பிரிட்டனில் புதிய மரபணு மாற்றத்துடன் கொரோனா வைரஸ் பரவத் துவங்கியதால், தன் பயணத்தை அவர் ரத்து செய்தார். இதையடுத்து, இம்மாத இறுதியில், அவர் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக, கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த பயண நாட்களை குறைத்துக்கொள்ள, பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவு செய்துள்ளார். நம் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளதால், அதை கருத்தில்கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.புதிய பயண திட்ட விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு வரும் போரிஸ் ஜான்சன், நம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, இருதரப்பு பேச்சு நடத்த உள்ளார். அதில், இருநாடுகளுக்கும் இடையே, ராணுவம் உள்ளிட்ட பல துறைகளில், ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.