பிரிவினையை உருவாக்கும்எதிர்க்கட்சிகள் – ராஜ்நாத் சிங்

புதுடெல்லி பிப். 29: விசாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: பாஜக வட இந்தியாவை மையமாக கொண்டுள்ள கட்சி அல்ல. குறுகிய அரசியல் ஆதாயத் துக்காக வடக்கு – தெற்கு என்ற பிளவை எதிர்க்கட்சிகள் உருவாக்கின. இது தேசிய ஒற்றுமையை கேள்விக் குறியாக்கும்.
கர்நாடகா உட்பட நாட்டில் உள்ள பல மாநிலங்களில் பாஜக ஆளும் கட்சியாக இருந்துள்ளது. பாஜக வட இந்தியாவுக்கான கட்சி என்று கூறுவது தவறானது. இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த கட்சி பாஜக எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
இந்தி அல்லாத அசாம் மாநிலத்தில் நாங்கள் முழு பெரும்பான்மையுடன் இரு முறை ஆட்சி அமைத்துள்ளோம். ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் சுமார் 30 முதல் 40 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்துள்ளோம்.கடந்த மக்களவைத் தேர்தலில் மேற்கு இந்தியாவில்தான் நாங்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றோம். மேற்கு வங்கம், ஒடிசா, கர்நாடகாவில் நாங்கள் 2-வது பெரிய கட்சியாக உள்ளோம். ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கேரளாவிலும் எங்களின் வாக்கு சதவீதம் அதிகரித்து வருகிறது.அதனால் பாஜக வட இந்தியர்களின் கட்சி என கூறுவது முற்றிலும் தவறானது. பாஜக மதவாத கட்சி என குற்றம் சாட்டப்படுவதும் தவறானது. உலகிலேயே பாஜக மிகப் பெரிய மதச்சார்பற்ற கட்சி. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.