பிரேத பரிசோதனை அறிக்கை என்ன கூறுகிறது?

புதுடெல்லி, ஜன. 5- டெல்லியில் கஞ்சவாலா நகரில் சுல்தான்புரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஸ்கூட்டியில் தோழியுடன் சென்ற அஞ்சலி சிங் (வயது 20) என்ற இளம்பெண், புது வருட தினத்தன்று தனது நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனம் சார்பிலான பணிகளை இரவு வரை இருந்து முடித்து கொடுத்து விட்டு பின்னர் வீட்டுக்கு புறப்பட்டு உள்ளார். அவர் மீது அதிகாலை 3 மணியளவில் கார் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. அவரது உடல் காரில் சிக்கியபடி பல கி.மீ. தொலைவுக்கு இழுத்து செல்லப்பட்ட கொடூர சம்பவம் நடந்து உள்ளது. இதன்பின் வேறொரு இடத்தில் நிர்வாண கோலத்தில் அவரது உடல் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தில் காரில் இருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உத்தரவின்பேரில் இளம்பெண் மரணம் பற்றிய விரிவான அறிக்கையை அளிக்கும்படி டெல்லி காவல் துறை ஆணையரிடம் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. இதன்படி, டெல்லி போலீசில் சிறப்பு காவல் ஆணையாளராக உள்ள ஷாலினி சிங்கை விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டு கொண்டுள்ளது. அஞ்சலிக்கு நடந்த பிரேத பரிசோதனை முடிந்துள்ளது. இந்நிலையில், அஞ்சலியுடன் சம்பவத்தன்று, மற்றொரு பெண்ணும் பயணம் செய்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர். இதன்படி, அஞ்சலி வாகனத்தின் பின்புறத்தில் அமர்ந்தும், நிதி என்ற அவரது தோழி ஸ்கூட்டியை ஓட்டியும் சென்றுள்ளார் என போலீசார் கூறியுள்ளனர். இவர்கள் இருவரும் ஓட்டல் ஒன்றில் இருந்து வெளிவரும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளிவந்துள்ளன. அதில், உயிரிழந்த இளம்பெண் அஞ்சலி மற்றும் அவரது தோழி நிதி இருவரும் அதிகாலை 1.30 மணியளவில் ஓட்டலை விட்டு வெளியே வருகின்ற காட்சிகள் இடம் பெற்று உள்ளன. ஒன்றரை மணிநேரம் அவர்கள் பயணம் கடந்துபோன நிலையில், அதிகாலை 3 மணியளவில் விபத்து நடந்துள்ளது. அவர்கள் வீட்டுக்கு செல்ல இவ்வளவு நேரம் எடுத்து கொண்டனரா? அல்லது வேறு எங்கும் சென்றனரா? என்ற கேள்வியும் வழக்கின் முன் விடை கிடைக்காமல் உள்ளது. இந்த சூழலில், தோழிகள் இருவரும் குடிபோதையில் ஒருவருக்கு ஒருவர் தகராறில் ஈடுபட்டு உள்ளனர் என்றும் அதனால், அவர்களை ஓட்டலில் இருந்து வெளியேற்றினேன் என அதன் மேலாளர் போலீசிடம் கூறியுள்ளார்.