பிஹாரில் பாஜக 17, ஐஜத 16 தொகுதிகளில் போட்டி

புதுடெல்லி, மார்ச் 19- மக்களவைத் தேர்தல் பிஹாரில்ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில் பிஹாரில் என்டிஏ கூட்டணிக் கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு இறுதிசெய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாடே நேற்று வெளியிட்டார். இதன்படி பிஹாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜக 17 தொகுதிகளில் போட்டியிடுகிறது. முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் 16 இடங்களில் களம் காண்கிறது.
இவை தவிர பிற கூட்டணிக் கட்சிகளில் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) 5 இடங்களில் போட்டியிடுகிறது. ஜிதன் ராம் மாஞ்சி தலைமையிலான ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா, உபேந்திர குஷ்வாகா தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி ஆகியவை தலா ஓரிடத்தில் போட்டியிடுகின்றன.
கடந்த 2019 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) பாஜக, ஐக்கிய ஜனதாதளம், லோக் ஜன சக்தி ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இக்கட்சிகள் மொத்தமுள்ள 40 இடங்களில் 39-ல் வெற்றிபெற்றன. ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைமையிலான மெகா கூட்டணி ஓரிடத்தில் மட்டும் வெற்றி பெற்றது.
கடந்த 2019 தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளும் தலா 17 இடங்களில் போட்டியிட்டன. இம்முறை பாஜக அதே எண்ணிக்கையிலான இடங்களில் போட்டியிடும் நிலையில் ஐக்கிய ஜனதா தளம் ஓரிடத்தில் குறைவாக போட்டியிடுகிறது.