பிஹாரில் ‘மகாபந்தன்’ தொகுதி பங்கீடு: லாலுவின் ஆர்ஜேடி 26 இடங்களில் போட்டி

பிஹார், மார்ச் 30: ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார், பாஜக.வுடன் மீண்டும் இணைந்து முதல்வரானார். இந்நிலையில், லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் உட்பட சில கட்சிகள் ‘மகாபந்தன்’ கூட்டணியில் உள்ளன. இந்த கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி, ஆர்ஜேடிகட்சி 26 தொகுதிகளிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் போட்டியிடுகின்றன.தவிர சிபிஐ (எம்எல்) 3 தொகுதிகள், சிபிஐ மற்றும் சிபிஐ (எம்) ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதிகளில் போட்டியிடுகின்றன. தொகுதிப் பங்கீடு அறிவிப்பு நிகழ்ச்சியில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், அவர் பங்கேற்கவில்லை. பிஹாரில் மிகவும் பிரபலமான பப்பு யாதவ், தனது ஜன் அதிகார் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார். அதன்மூலம் இந்த மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியை ஒதுக்குவதாககாங்கிரஸ் தலைவர்கள் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி இருவரும், பப்புயாதவுக்கு வாக்குறுதி அளித்துள்ளனர்.
பப்பு யாதவின் மனைவி ரஞ்ஜீத் ரஞ்சன் தற்போது மாநிலங் களவை எம்.பி.யாக இருக்கிறார். இந்நிலையில், புர்னியா தொகுதியை பப்பு யாதவ் கேட்டிருந்தார். ஆனால், அந்த தொகுதியில் போட்டியிட ஆர்ஜேடி.யும் ஆர்வமாக இருந்தது. எனவே புர்னியா தொகுதியை காங்கிரஸ் விட்டுக் கொடுத்தது.