பிஹாரில் 63 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்டோர் ஜாதிவாரி கணக்கெடுப்பு

புதுடெல்லி, அக். 3 பிஹாரில் 63.14 சதவீத மக்கள் பிற்படுத்தப்பட்டோர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஜாதிவாரியாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
நாடு விடுதலை அடைவதற்கு முன்பாக ஆங்கிலேயர் ஆட்சியின்போது ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு முதன்முறையாக நடத்தப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில்தான் நாடு முழுவதும் இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது.
நாடு விடுதலையடைந்த பின்னர் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன. 1980, 1990களில் இடஒதுக்கீடு விவகாரம் பூதாகரமாக உருவெடுத்தது. ஆனாலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
இதன் பின்னர் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் அந்த புள்ளி விவரங்கள் முழுமையாக இல்லை என்று பாஜக அரசு தெரிவித்து வருகிறது.
இதனிடையே, பிஹாரை ஆளும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியது. இதற்கு எதிராக பல வழக்குகள் தொடரப்பட்டன. ஆனாலும் பிஹார் மாநில அரசு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி முடித்து அதன் விவரங்களை வெளியிட்டுள்ளது.
பிஹார் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 13.1 கோடியாகும். இவர்களில் பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த மக்கள் மட்டும் 63.14 சதவீதம் உள்ளனர். இதில் பிற்படுத்தப்பட்டோர் 27.13 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 36.01 சதவீதமும் உள்ளனர். ஆக மொத்தம் மாநிலத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 63.14 சதவீதம் ஆகும்.மேலும் மாநிலத்தில் வசிக்கும் பொதுப் பிரிவினர் 15.52 சதவீதமாக உள்ளனர். தலித் மக்கள் 19.65 சதவீதமும், பழங்குடி இனமக்கள் 1.69 சதவீதமும் மாநிலத்தில் வசிக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.
மேலும், மத ரீதியான கணக்கெடுப்பு விவரத்தின்படி இந்துக்கள் 81.99%, முஸ்லிம்கள் 17.7% , கிறிஸ்தவர்கள் 0.05%, சீக்கியர்கள் 0.01%; பவுத்த மதத்தினர் 0.08%, இதர மதத்தினர் 0.12% பிஹாரில் வசிக்கின்றனர்.