‘பி.எம்., கேர்ஸ்’ இணையதளத்தில் பிரதமர் புகைப்படத்தை நீக்க மனு; மும்பை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

மும்பை, அக். 13- ‘பி.எம்., கேர்ஸ்’ நிதி அறக்கட்டளை இணையதளத்தில் பிரதமர் பெயர், புகைப்படம், தேசிய கொடி, தேசிய சின்னங்களின் வடிவங்களை நீக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு, மும்பை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் விக்ரந்த் சவான் மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியுள்ளதாவது: கொரோனா தொற்று பரவலின்போது, சுகாதார அவசர தேவைகளுக்காகவும், பொது மக்களின் மருத்துவ நல திட்டங்களுக்காகவும் ‘பி.எம்., கேர்ஸ்’ நிதி என்ற அறக்கட்டளையை பிரதமர் நரேந்திர மோடி துவக்கினார்.
பி.எம்., கேர்ஸ் நிதி அரசாங்கத்தின் நிதி அல்ல. தாமாக முன்வந்து அளிக்கும் தனிநபர், நிறுவனங்கள் நன்கொடையை மட்டுமே பி.எம்., கேர்ஸ் நிதி பெறுகிறது. நன்கொடை அளிக்கப்படும் தொகைக்கு, 100 சதவீத வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. மத்திய அரசுக்கும், இதற்கும் எந்தவிதத் தொடர்புமில்லை என மத்திய அரசே தெரிவித்துள்ளது.
அப்படியிருக்கையில் பி.எம்., கேர்ஸ் நிதி அறக்கட்டளையின் இணையதளத்தில் பிரதமர் பெயர், அவரது படம், தேசிய கொடி, தேசிய சின்னம் ஆகியவற்றின் வடிவங்கள் இடம் பெற்றுள்ளது, அரசியல் சட்டத்தை மீறிய செயல்.அதனால் இணையதளத்தில் இருந்து பிரதமரின் பெயர், படம், தேசிய கொடி, சின்னம் ஆகியவற்றின் வடிவங்கள் ஆகியவற்றை நீக்க உடனடியாக உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் சயீத், திகே ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் இது குறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.