பீகாரில் கோர விபத்து 9 பேர் பலி

பாட்னா: பிப். 26: பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் கண்டெய்னர் லாரியும், காரும் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
பீகார் மாநிலம் கைமூர் மாவட்டம் மோகனியா நகரில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று மாலை ஒரு ஜீப் சென்றுகொண்டிருந்தது. அதில் 2 பெண்கள் உள்பட 8 பேர் பயணித்தனர். தேவ்காளி கிராமம் அருகே உள்ள மொஹானியா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து அவ்வழியாக சென்ற இருசக்கர வாகனத்தின் மீது லேசாக மோதியுள்ளது.தொடர்ந்து, தாறுமாறாக ஓடிய கார் சாலையின் குறுக்கே இருந்த டிவைடரை தாண்டி மறுபக்கம் சென்று, அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரி மீது மோதியுள்ளது. இதில் அந்த வாகனம் தலைகீழாக கவிழ்ந்து மொத்தமாக நசுங்கியது. இந்த கோர விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். இந்நிலையில், பீகாரில் நடந்த கோர விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு முதல்வர் நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.