புகைப்பட கலைஞருக்கு சர்வதேச விருது

பொள்ளாச்சி: அக். 17- பொள்ளாச்சி அன்சாரி வீதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் முரளி (38). இவர், காட்டுயிர் ஒளிப்பட கலையில் அதிக ஆர்வம் கொண்டு, வனப்பகுதிகளுக்கு சென்று வன விலங்குகள் உள்ளிட்ட அங்கு வாழும் உயிரினங்களை இயற்கையாக படம் பிடித்து வந்துள்ளார்.
கடந்த 2022 ஏப்ரல் மாதம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட உலாந்தி வனப்பகுதியில், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் ராம சுப்ரமணியன், வனத்துறையினர் மற்றும் காட்டுயிர் புகைப்பட கலைஞர் ஸ்ரீராம் முரளி ஆகியோர் மின்மினி பூச்சிகளின் பெரிய கூட்டத்தின் ஒத்திசைவு ஒளிர்வை கண்டனர். உலகம் முழுவதும் 2000-க்கும் மேற்பட்ட மின்மினி பூச்சி வகைகள் உள்ளன.
ஆனால், ஒரு சில மட்டுமே ஒத்திசைவானவை. கோடிக்கணக்கான மின்மினி பூச்சிகள் காடு முழுவதும் தங்கள் ஒளியை உமிழ்ந்து ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த இந்த ஆபூர்வ நிகழ்வை, ஸ்ரீராம் முரளி தத்ரூபமாக படம் பிடித்தார். லண்டன் இயற்கை வரலாறு அருங்காட்சியகம் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் வன விலங்குகள், கடல்வாழ் உயிரினங்கள், பறவைகள் உள்ளிட்ட 16 வகையான பிரிவுகளில் சிறந்த புகைப்பட கலைஞருக்கான விருது அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறந்த புகைப்பட கலைஞர் விருது போட்டியில், வனப்பகுதியில் வசிக்கும் விலங்குகள், ஊர்வினம், கடல் சார்ந்த உயிரினங்கள், முதுகெலும்பில்லா உயிரினங்கள் என 16 வகையான உயிரினங்களின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.
வனப்பகுதியில் லட்சக் கணக்கான மின்மினி பூச்சிகள் மரத்தின் மீது அமர்ந்து கொண்டு, பெண் மின்மினி பூச்சிகளை கவர்வதற்காக ஒளி வெளிச்சம் போட்டு ஒத்திசைவான நிகழ்வை நிகழ்த்தியுள்ளது. உலகம் முழுவதும் இதுபோன்ற ஒத்திசைவுகள் நடந்தாலும், பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் நடந்த இந்த நிகழ்வு இயற்கை அன்னை கொடுத்த தனித்துவம்.
உலகம் முழுவதும் வந்திருந்த அனைவரின் பாராட்டையும் இந்த நிகழ்வு கவர்ந்துள்ளது. வனப்பகுதியிலுள்ள விலங்குகளை பாதுகாக்க வனத்துறையினர் மற்றும் அரசு எடுத்து வரும் முயற்சியை அனைவரும் புகழ்ந்து பாராட்டினார்கள். வனப்பகுதியை காப்பாற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்பட வேண்டும்” என்றார்.