புதிய ஆயுதங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை

மும்பை, மார்ச் 7- முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவில் மிகவும் மதிப்புடைய நிறுவனமாகத் திகழ்கிறது, இதன் சந்தை மதிப்பு மட்டும் ரூ.20,36,000 கோடியாகும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பல்வேறு துணை நிறுவனங்களுடன் பல வகையான தொழில்களில் ஈடுபட்டு வருகிறது.
இதில் ஒரு துணை நிறுவனமான மாடல் எக்கனாமிக் டவுண்ஷிப் லிமிடெட் அல்லது மெட் சிட்டி நிறுவனம் தேசிய தலைநகர் பகுதியில் ஒரு ஸ்மார்ட் சிட்டியை கட்டியெழுப்பி வருகிறது. இந்த புதிய பசுமை சிட்டி ஹரியாணாவின் குருகிராம் அருகே உள்ள ஜஜ்ஜார் பகுதியில் அமைந்துள்ளது.
டெல்லி-என்சிஆர் பகுதியில் இது மிக முக்கியமான பொருளாதார மண்டலமாகும். இந்த சிட்டியில் தற்போது தொழில் ஜாம்பவான்களான நிஹோன் கோஹடென், பானாசானிக், டெண்சோ, டி-சுசூகி ஆகிய நிறுவனங்கள் உள்ளன. இப்போது புதிதாக ஆயுதத் தயாரிப்பு நிறுவனமான SAAB-இன் இந்திய கிளை நிறுவனமான Saab FFVO India Pvt Ltd என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியிருப்பதாகவும் இது 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டின் மூலம் இயங்குகிறது என அறிவித்துள்ளது.
முகேஷ் அம்பானியின் இந்த ஸ்மார்ட் சிட்டியில் சாப் நிறுவனத்தின் ஆயுத உற்பத்தி ஆலை நிறுவப்படுகிறது.
இந்த ஆலையில் கார்ல்-குஸ்டாஃப் எம்4 ரக ஆயுதங்கள் தயாரிக்கப்படும். இந்திய ஆயுதப் படைகளுடன் நீண்ட வரலாற்றைக் கொண்ட கார்ல்-குஸ்டாஃப் தயாரிப்புக்காக ஸ்வீடனுக்கு வெளியே எங்கள் முதல் தொழிற்சாலை உருவாக்குவதில் நான் பெருமைப்படுகிறேன். எங்களின் சிறந்த தயாரிப்பின் உற்பத்தியைத் தொடங்க ஆவலுடன் காத்திருக்கிறோம் என்கிறார் மூத்த துணைத் தலைவரும், சாபின் வணிகப் பகுதி டைனமிக்ஸின் தலைவருமான கோர்கன் ஜோஹன்சன்.
சாப் இந்திய சப்ளையர்களுடன் கூட்டு சேர்ந்து, இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் அனைத்தும் “மேக் இன் இந்தியா” தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யும். புதிய தொழிற்சாலையில், இந்திய ஆயுதப் படைகளுக்கு கார்ல்- குஸ்டாஃப் எம்4 தயாரிப்பதற்கு தொழில்நுட்பம், மேம்பட்ட கார்பன் ஃபைபர் மற்றும் பிற பயனர்களின் அமைப்புகளில் சேர்க்கப்படும் கூறுகள் உள்ளிட்ட சிக்கலான தொழில்நுட்பங்களை சாப் பயன்படுத்துகிறது. கார்ல்-குஸ்டாஃப் ஆயுதம் 1976 ஆம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய ஆயுதப்படைகளில் முக்கிய தோள்பட்டையால் தாங்கி ஏவப்படும் ஆயுதம் இது.