புதிய உச்சம் தொட்டது பங்குச் சந்தை

மும்பை: ஜூன்.8- நேற்று பங்குச் சந்தை புதிய உச்சம் தொட்டது. நேற்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 1,618 புள்ளிகள் உயர்ந்து 76,693ஆகவும் நிஃப்டி 468 புள்ளிகள் உயர்ந்து 23,290 ஆகவும் உச்சம் தொட்டன. சதவீத அளவில் சென்செக்ஸ் 2.16%, நிஃப்டி 2.05% உயர்ந்தன.
மக்களவைத் தேர்தல் முடிவுகள்வெளியாகி, நரேந்திர மோடி மூன்றாவது முறை பிரதமராக பொறுப்பேற்க உள்ள நிலையில் பங்குச் சந்தை ஏற்றம் கண்டு வருகிறது.
இதனிடையே ரெப்போ விகிதம்முந்தைய அளவான 6.5 சதவீதத்திலேயே தொடரும் என்றும் 2024-25-ல் நாட்டின் வளர்ச்சி 7.2சதவீதமாக உயரும் என்று மதிப்பிட்டிருப்பதாகவும் நேற்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக, நேற்று பங்குச் சந்தையில் முதலீடு குவிந்ததால், புதிய உச்சம் தொட்டது.
அதிகபட்சமாக எம் அண்ட் எம்5.84%, விப்ரோ 5.11%, டெக் மஹிந்திரா 4.57%, இன்போசிஸ் 4.17%, அல்ட்ராடெக் சிமெண்ட் 4.06%, பார்தி ஏர்டெல் 3.99%, டாடா ஸ்டீல் 3.98%, பஜாஜ் பைனான்ஸ் 3.83% என்ற அளவில் ஏற்றம் கண்டன.
கடந்த வாரம் சனிக்கிழமை மக்களவை இறுதிக் கட்டத் தேர்தல் நிறைவடைந்ததையடுத்து, ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டன. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 350 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்றும் காங்கிரஸ் 150 இடங்கள் வரையிலேயே வெல்லும் என்றும் பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவித்தன. இதையடுத்து கடந்த திங்கள் கிழமை பங்குச் சந்தை உச்சம் தொட்டது.
ஆனால், மறுநாள் தேர்தல் முடிவு கள் வெளியான போது கருத்து கணிப்புக்கு மாறாக காங்கிரஸ் அதிக இடங்களில் வென்றது. அதிகஇடங்களில் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட பாஜக கூட்டணி 292 இடங்களிலேயே வென்றது. இதனால், பங்குச் சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது. தற்போது தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆதரவுடன் பிரதமராக மோடி மூன்றாவது முறை ஆட்சிப் பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில், புதன்கிழமை தொடங்கி கடந்த மூன்று நாட்களாக பங்குச் சந்தை ஏறுமுகத்தில் உள்ளது.